இன்று எத்தனையோ இயக்குநர்கள் டிரெண்ட் செட்டர்களாக வந்து போகிறார்கள். அதே போல் ஒரு காலத்தில் டிரெண்ட் செட்டராக இருந்தவர் டி.ராஜேந்தர். அவரது பெயரைக் குறிப்பிட வேண்டும் என்றால் பெயருக்கு முன் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் என்று ஒரு நீண்ட வரிசையையே குறிப்பிட்டு தான் ஆக வேண்டும்.
தான் படங்களை இயக்கும் காலத்தில் அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டவர் டி.ஆர். இன்றை சூழலில் அவர் அப்டேட்டில் இல்லாமல் போகலாம், ஆனால் 100 நாட்கள் ஓடாத அவரது படங்கள் குறைவு. அவரது இயக்கத்தில் அறிமுகமான சந்தானம், வெகு நாட்களுக்குப் பிறகு டி.ஆர் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலைப் சமீபத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
ரொம்ப கோபப்படுவார்
தான் நடித்த டிடி ரிடர்ன்ஸ் படத்தின் புரோமோஷன் நிகழ்வுகளில் பிஸியாக இருக்கும் சந்தானம் நிகழ்ச்சி ஒன்றில் டி.ஆர் இயக்கிய வீராசாமி படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “வீராசாமி படத்தின்போது டி. ராஜேந்திரன் சார் செய்ததை என் வாழ்நாளில் எப்போதும் என்னால் மறக்கவே முடியாது. பொதுவாகவே டைரக்ஷன் செய்யும்போது அவர் அதிகம் கோபப்படுபவராக இருப்பார். அப்போது நாங்கள் எடுத்துக்கொண்டிருந்த காட்சியில் ஒரு நடிகர் - நடிகை நீச்சல் குளத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும். இருவரும் பம்பாயில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு தமிழ் தெரியாது. நீச்சல் குளத்தின் மறுமுனையில் கேமரா வைக்கப்பட்டிருந்தது. இங்கிருந்து டி.ஆர் சார் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். ஆனால் அந்த நடிகருக்கு புரியவில்லை.
கோபத்தில் தண்ணீரில் குதித்த டி..ஆர்
கோபமடைந்த டி.ஆர். நீச்சல் குளத்தில் குத்தித்து நீந்தியபடி மறுமுனைக்குச் சென்றார். அவர் பெண்களைத் தொடமாட்டார் என்பதால் என்னை அழைத்து எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்காட்டினார். பின் மீண்டும் நீந்தியபடி மறுபக்கம் வந்து ஆக்ஷன் சொன்னார்” என்றார். இந்நிலையில், சந்தானம் டி.ராஜேந்திரரைப் பற்றி சொன்ன இந்த தகவல் இணையத்தில் வைரலானது.