பிரபல தமிழ் சினிமாவில் இயக்குநரும், காமெடி நடிகருமான டி. பி. கஜேந்திரன்(TP Gajendran) (68) உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.பி. கஜேந்திரன் சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். 


பல்வேறு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள இவர் பழம்பெறும் நடிகை டி.பி. முத்துலட்சுமி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 


இயக்குநர் விசுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய டி. பி. கஜேந்திரன், விசுவை போன்றே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார்.


டி.பி. கஜேந்திரன் இயக்கிய படங்கள்:


பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பாசமுள்ள பாண்டியரே, பந்தா பரமசிவம் உள்ளிட்ட 16 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 


கடந்த 1988 ஆம் ஆண்டு வீடு, மனைவி, மக்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் டி.பி.கஜேந்திரன். சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் நடிகரான அறிமுகம் ஆகி பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட 50 க்கு மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்தார். 


நடிகர் டி.பி. கஜேந்திரனும், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலினும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.பி. கஜேந்திரன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் ஓய்வு எடுத்தார். அப்போது, முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.