எண்ணற்ற கலைஞர்கள் தமிழ் திரையுலத்தினரால் இன்றளவும் போற்றப்படுகிறார்கள். அப்படி அழியாத புகழ் கொண்ட முக்கியமான ஒரு கலைஞர் பாடகர் டி. எம். சௌந்தராஜன். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்ற ஜாம்பவான்களை பார்த்து வளர்ந்த டி.எம் சௌந்தராஜன் பாட தெரிந்தவராக இருந்தால் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகி விடலாம் என்ற எண்ணத்தோடு சினிமாவில் அடியெடுத்து வைத்தார். ஆனால் அவர் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் நிலைமை வேறு மாதிரி இருந்தது. நடிகர்கள் பாட தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது இல்லை. பின்னணி பாடகர்கள் பாடலாம் என்ற நிலைமை இருந்தது. அந்த வகையில் ஒரு பின்னணி பாடகராக 1946ம் ஆண்டு வெளியான 'கிருஷ்ண விஜயம்' படத்தில் 'ராதே என்னை விட்டு ஓடாதடி'  என்ற பாடலின் மூலம் அறிமுகமானார். 



தனிச்சிறப்பு கொண்ட டி.எம்.எஸ் :


டி.எம் சௌந்தர்ராஜன் நினைத்தது நடக்காமல் போனாலும் அவரின் குரல் வளம் ஆளுமை செய்தது. நடிகர்களுக்கேற்ப தனது குரலை மாற்றி பாட கூடிய வித்தகர்.சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவருக்கும் ஏற்றபடி சிறிய வேறுபாடுகளுடன் குரலை மாற்றி பாடுவது டி.எம்.எஸ் தனிச்சிறப்பு . மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தனித்துவமாக கருதப்படுவது அவரின் குரல் வளம். அதில் டி.எம்.எஸ் பங்கு பெரும்பாலானது என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. கமல், ரஜினிக்கு கூட பின்னணி குரல் கொடுத்துள்ளார். நடிகர்களுக்கு மட்டுமின்றி நடிகைகளுக்கு கூட குரல் கொடுத்துள்ளார் டி.எம்.எஸ் என்பது ஆச்சரியமானது.பொதுவாக நடிகைகள் ஆண் வேடமிட்டு நடிக்கும் போது பெண் பாடகிகள்தான் குரல் கொடுப்பார்கள் ஆனால் 'குலதேவி'  படத்தில்  மைனாவதிக்கும், 'மகராசி' படத்தில் மனோரமாவுக்காகவும் குரல் கொடுத்துள்ளார் டி.எம்.எஸ். 


முருக பக்தர் :


சினிமா பாடல்களை மட்டுமின்றி பக்தி பாடல்களை மனமுருகி பாடுவதில் டி.எம்.எஸ் மிஞ்ச யாரும் இதுவரையில் பிறக்கவில்லை. சௌராஷ்ட்ரா மொழியை தாய்மொழியாக கொண்ட ஒருவர் தமிழ் மொழிக்கு எத்தனை அழகாக தொண்டு செய்துள்ளார் என டி.எம்.எஸ் பற்றி பெருமையுடன் கூறலாம். முருக பெருமானின் தீவிரமான பக்தரான டி.எம்.எஸ் பக்தி பாடல்களை கேட்கும் போது ' எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என உணர தோன்றும் அளவிற்கு மந்திர குரல் கொண்டவர். உள்ளம் உருகுதைய்யா என கேட்போரின் மனங்களை உருக வைத்தவர் வித்தகர். பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியவர் டி.எம்.எஸ். இன்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில் திருவிழாக்களிலும் டி.எம்.எஸ் பாடல்கள் தான் ஒளித்து கொண்டு இருக்கின்றன. 


24 வயதில் பாட துவங்கிய இசை கலைஞன் 88 வயது வரை பாடி இனிமை சேர்த்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடல் தான் அவர் கடைசியாக பாடிய பாடல் என  கூறப்படுகிறது. 2013-ஆம் ஆண்டு தனது 91 வயதில் வயது மூப்பு காரணமாக இறைவனடி சேர்ந்தார். அவரின் 10 ஆண்டு நினைவு தினம் இன்று. இசை உள்ளவரை டி.எம்.எஸ் பாடல்களால் ஒலித்துக்கொண்டே இருக்கும்.