சுஷாந்த்சிங் மரணம்:


கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி தோனியின் பயோபிக் படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடத்திலும் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையிலுள்ள பாந்த்ரா இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.


இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரம் பீகார் அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. காரணம் பீகார் போலீசில் சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அவரது காதலி சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 


விலகாத மர்மம்:


இப்பிரச்சனை உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் சுஷாந்த் சிங் தந்தை புகாரில், ரியா தனது மகனை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், அவருக்கு போதை மருந்து கொடுத்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாகவும் புகாரளித்தார். 


இதில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ரியா 28 நாட்களும், அவரது சகோதரர் ஷோக் 3 மாதங்களும் பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். இன்று வரை சுஷாந்த் ஏன் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது மர்மமாக இருக்கும் நிலையில், தற்போது பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


உடலில் காயங்கள்:


சுஷாந்த் சிங் உடலுக்கு உடற்கூராய்வு செய்த அறையில் இருந்தவரின் வாக்குமூலம் வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூராய்வுக்காக அவர் உடல் கொடுக்கப்பட்டபோது, அதில், காயங்கள் போன்று பல அடையாளங்கள் காணப்பட்டன என அவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதுமட்டுமின்றி, சுஷாந்த் சிங்கின் கழுத்தில் இரண்டு முதல் மூன்று காயங்கள்  காணப்பட்டன என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது, ​​கூப்பர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக ஐந்து சடலங்களைப் பெற்றோம். அந்த ஐந்து உடல்களில் ஒன்று வி.ஐ.பி. உடல். நாங்கள் பிரேத பரிசோதனை செய்யச் சென்றபோது, ​​அவர் சுஷாந்த் என்றும், அவரது உடலில் பல காயங்களும், கழுத்தில் இரண்டு முதல் மூன்று காயங்கள் இருப்பதை பார்த்தோம்.


கொலை:


போஸ்ட்மார்ட்டத்தை பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், சில புகைப்படங்களை மட்டுமே எடுக்குமாறு உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். எனவே, அவர்களின் உத்தரவுப்படி நாங்கள் செய்தோம். சுஷாந்தின் உடலை முதன்முறையாகப் பார்த்தபோது, ​​அது தற்கொலையல்ல, கொலை என உணர்கிறேன் என்று சீனியர்களிடம் உடனடியாக தெரிவித்தேன். நாங்கள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன்.


இருந்தாலும், சீக்கிரம் படங்களை க்ளிக் செய்து, உடலை போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி என் சீனியர்கள் என்னிடம் சொன்னார்கள். எனவே, இரவில்தான் பிரேதப் பரிசோதனை செய்தோம்" என்றார். சுஷாந்த்சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த அறையில் இருந்தவரின் தகவல் தற்போது பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.