பிரபல பாலிவுட் நடிகர் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 38ஆவது பிறந்த தினம் இன்று! கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி, மும்பை, பாந்த்ராவில் உள்ள தன் வீட்டில், தனது 34 வயதில் தற்கொலை செய்து நடிகர் சுஷாந்த் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களயும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.


தோனியாக அசத்தியவர்!




கை போ சே, ஷட் தேசி ரொமான்ஸ், பிகே ஆகிய பாலிவுட் படங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்த சுஷாந்த், எம்.எஸ்.தோனி எனும் ஒற்றைப் படத்தின் மூலம் நாடு தாண்டி கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தார்.


எம்.எஸ்.தோனியின் குட்டி குட்டி மேனரிசம் தொடங்கி, அவரது ஹெலிகாப்டர் ஷாட் வரை திரையில் அப்படியே பிரதிபலித்த சுஷாந்தை ரசிகர்கள் கொண்டாடினர். தொடர்ந்து கவனமீர்த்து வந்த சுஷாந்த், கடந்த 2020ஆம் ஆண்டு திடீரென இறந்த நிலையில் அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டார்.


ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையே இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பாலிவுட்டில் இருக்கும் வாரிசுகளின் ஆதிக்கம், அதனால் கைவிட்டு போன படங்கள், சுஷாந்துக்கு ஏற்பட்ட மன உளைச்சல் என பல குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகின் மீதுமே வைக்கப்பட்டன.


தற்கொலையும் மர்மங்களும்




இறுதியாக சுஷாந்த் நடித்த ‘சிசோரே’ படத்தில் தற்கொலை எண்ணங்களுக்கு எதிராகவும் நேர்மறையாகப் பேசியும் அவர் நடித்திருந்த நிலையில், சுஷாந்த் நிச்சயம் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார் என்றும், இந்த வழக்கில் பல மர்மங்கள் இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கினர்.


மற்றொருபுறம் சுஷாந்துக்கு நல்ல பட வாய்ப்புகள் பல குவிந்ததாகவும், இது கொலையாக இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. எனினும் அவரது உடற்கூராய்வு முடிவுகளின்படி சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டது.


தொடரும் வழக்கு






மற்றொருபுறம் சுஷாந்தின் முன்னாள் காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்கு போதை வஸ்துக்கள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டதுடன், பாலிவுட்டின் பல உச்ச நட்சத்திரங்களுக்கும் அவர் போதை வஸ்துக்கள் வழங்கியதாகவும் இவ்வழக்கு திசை மாறி பயணிக்கத் தொடங்கியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா, 28 நாள்கள் சிறையில் கழித்து பின் ஜாமின் பெற்று வெளிவந்தார்.


இவற்றுக்கிடையே சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்கள் தொடர்ந்து சுஷாந்தின் இறப்பில் உள்ள மர்மங்களை கட்டவிழ்க்கும்படியும், சுஷாந்துக்கு நியாயம் கோரியும் இணையத்தில் பதிவிட்டு வருகிறனர்.


குடும்பத்தினர், ரசிகர்கள் உருக்கம்!


இந்நிலையில் இன்று சுஷாந்தின் 38ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சுஷாந்தின் ரசிகர்கள் அவரை கண்ணீர்மல்க நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சுஷாந்த் பற்றி நினைவுகூர்ந்துள்ள அவரது சகோதரி ஸ்வேதா சிங்,  “நீ பல கோடி மக்களின் வாழ்ந்து அவர்கள் நன்மை செய்ய ஊக்குவித்து வருகிறாய். எங்களை வழிநடத்தும் ஸ்டாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.


 






மேலும் நடிகை ரியா சக்ரவர்த்தி தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சுஷாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.




மேலும் சுஷாந்தை “நாங்கள் என்றைக்கும் நினைவுகூர்ந்து கொண்டிருப்போம், அவர் மறையவில்லை, என்றும் எங்கள் இதயங்களில் வாழ்கிறார்” என அவரது ரசிகர்கள் பலரும் இணையத்தில் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்து வருகின்றனர்.