சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான நான் மகான் அல்ல திரைப்படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கார்த்தியின் கரியரின் தொடக்கத்தில் அவருக்கு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தில் இடம்பெற்ற அதீத வன்முறை சித்தரிப்புகளே.



நான் மகான் அல்ல

அம்மா, அப்பா , தங்கையைக் கொண்ட ஒரு மிடிள் கிளாஸ் குடும்பத்தில் பிறந்துவந்தவன் ஜீவா (கார்த்திக்). படிப்பை முடித்துவிட்டு வேலை பொறுப்பாக வேலைக்கு செல்லவேண்டும் என்கிற சுமை இல்லாமல் ஜாலியாக நண்பர்களுடன் சுற்றித்திரிபவர். இதற்கிடையில் காதல் வேறு. வழக்கமான கடுகடுப்பான தந்தையாக இல்லாமல் தோளில் கைபோட்டு பேசுபவர் ஜீவாவின் தந்தை (ஜெயபிரகாஷ்). ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தில் டிரைவராக இருப்பவர். ஒருபக்கம் இந்த குடும்பம் இருக்க மறுபக்கம் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி பெண்களைக் கடத்தி பலாத்காரம் செய்து அவர்களை கொலை செய்து வருகிறார்கள் சில கல்லூரி இளைஞர்கள். இந்த கும்பல் செய்யும் ஒரு தவறுக்கு சாட்சியாக அமைகிறார் ஜீவாவின் தந்தை அதற்காக அவரை கொலை செய்கிறார்கள். தனது தந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து அவர்களை ஜீவா பழிவாங்குவதுதான் படத்தின் கதை





விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட இந்தப் படம் இவ்வளவுப் பெரிய வெற்றியடைந்ததற்கு காரணம் ஒவ்வொரு காட்சியையும் நகர்த்தும் முக்கிய கருவியாக வன்முறை இருப்பதால்தான்.


மிக கொடுரமான முறைகளில் பெண்களை கொலை செய்யும் கும்பல், அதேபோல் ஜீவாவின் அப்பாவை கொல்ல போடும் ஸ்கெட்ச் க்ளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சி என மிக சுவாரஸ்யமான த்ரில்லராக அமைந்த இந்தப் படம் அதீதமான அதே நேரத்தில் சுவாரஸ்யமான வன்முறைக் காட்சிகளை கொண்டது. ஆனால் இதில் ஒரு மிகப் பெரிய சிக்கல் இருக்கிறது.


படத்தில் கொடூரமான அத்தனை செயல்களையும் செய்யும் அந்த இளைஞர்களுக்கு என்ன பின்னணி அவர்கள் எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்கிற எந்த விவரமும் இல்லாமல் சென்னையில் இருக்கும் சென்னை மொழி பேசும் நான்கு பேர் என்று மட்டுமே படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்தவர்கள் குற்றம் செய்பவர்களாக கூட இருக்கட்டும் ஆனால் இவ்வளவு நேர்த்தியான புத்திசாலித்தனமான திரைக்கதையை எழுதி உண்மையிலேயே ரசிகர்கள் பார்த்து மிரண்டுபோகும் அளவிற்கு வில்லன் கதாபாத்திரங்களை ஏன் அடையாளம் இல்லாத சாதாரண மனிதர்களின் மேல் சுமத்தி அவர்களுக்கு அந்த சாயலை உருவாக்க வேண்டும் என்பதே கேள்வி?


அதே நேரத்தில் சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் அனைவரும் மோசமானவர்கள் இல்லை என்பதையும் இயக்குநர் காட்டுகிறார்தான். ஆனால் அதீதமான வன்முறைக் காட்சிகளை மையமாக வைத்து நகரும் ஒரு படம் நிச்சயம் சாமான்ய மனிதர்களின் மீது சுமத்தப்படுகிறது என்பது முக்கியம்.