சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நிறைவடைந்துள்ளது. படக்குழுவினருடன் சிறுத்தை சிவா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இதை உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு :
யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ராஜா, வம்சி பிரமோத் மற்றும் கே.ஈ. ஞானவேல் ராஜா கூட்டணியில் இணைந்து தயாரிக்கும் சூர்யா 42 படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி சேரும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. பின்னர் அதனை தொடர்ந்து படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் படத்தின் கதாநாயகியின் காட்சிகள் படமாக்கப்பட்டன என கூறப்படுகிறது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிப்பட இயக்குநர் சிறுத்தை சிவா:
இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் என்றுமே வெற்றி பெறும். அவர் இதுவரையில் இயக்கிய திரைப்படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட கதையை இப்படத்தின் மூலம் தர உள்ளார். சூர்யா 42 திரைப்படம் ஒரு வரலாற்று பின்னணியை மையமாக வைத்தும் 3D தொழில்நுட்பம் கொண்டு படத்தை உருவாக்குகின்றனர் என கூறப்படுகிறது. மேலும் இப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார்க்கி வசனம் எழுத இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.
சூர்யாவின் பிஸி ஷெட்யூல் :
சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகிவரும் "வணங்கான்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் திரைப்படங்களை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் "வாடிவாசல்" திரைப்படத்திலும் பிஸியாக உள்ளார் சூர்யா. அடுத்தடுத்து வெளியாகப்போகும் படங்களால் சூர்யா ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். நடிகர் சூர்யாவிற்கு சமீபத்தில் தான் "சூரரைப் போற்று" படத்திற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.