தமிழ் சினிமா வரலாற்றில் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் படமாக இருப்பது சூர்ய வம்சம். இப்படம் 1997ல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ராதிகா, தேவயானி, ப்ரியா ராமன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் என பலரும் நடித்திருந்தனர். இப்படம் 90்ஸ் கிட்ஸ்களை மட்டும் இல்லாமல் இன்றைய தலைமுறையினரும் ரசித்து பார்க்கும் படமாக சூர்ய வம்சம் இருக்கிறது. 

Continues below advertisement

90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த கிளாசிக் சினிமா

இப்படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காமெடி காட்சிகளும் மீம்ஸ் கன்டன்டாக வந்து ஈர்த்துள்ளது. அதேபான்று இப்படத்தில் இடம்பெற்ற இட்லி உப்புமா காட்சிகள் இன்றைக்கும் ஃபேமஸ் ஆகியுள்ளது. பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடிகர் சந்தானம் ஆர்யாவை பெரிய சூர்ய வம்சம் சரத்குமார் தேவயானி என்று கலாய்த்திருப்பார். அந்த அளவிற்கு இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கும்படியே இருக்கின்றன. தொலைக்காட்சியில் அதிகம் டெலிகாஸ்ட் செய்யப்படும் படங்களின் வரிசையில் சூர்ய வம்சம் இருக்கிறது. பாயாசம் சாப்பிடுறீங்களா ப்ரண்ட்ஸ் போன்ற காட்சி காமெடியாக டிரெண்டாகி வருகிறது. இப்படி சூர்ய வம்சம் படத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். 

எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட்

தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரிசா ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் படமாகவும் மாறியிருக்கிறது. இந்நிலையில், சூர்ய வம்சம் 2 படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக நடிகர் சரத்குமார் சூர்ய வம்சம் 2 குறித்து இயக்குநர் விக்ரமனிடம் பேசியிருக்கிறேன். அப்படம் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற படமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சூர்ய வம்சம் 2 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

சூர்ய வம்சம் 2 எப்போது?

சூர்ய வம்சம் 2ஆம் பாகத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அவருடன் இணைந்து ஜீவாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சரத்குமார் அப்பாவாகவும், சின்ன குழந்தை தான் ஜீவாவாக நடிக்க இருக்கிறார். ஆர்.பி.செளத்ரி நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாகத்தை இயக்குவது விக்ரமன் இல்லை. மைனா, கயல், கும்கி படத்தை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமனின் உதவி இயக்குநர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விக்ரமன் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். அவருடைய ஒப்புதலுடன் சூர்ய வம்சம் 2 படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2ஆம் பாகம் வெற்றி பெறுமா?

ஹாலிவுட் திரையுலகை போன்று தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படங்களின் 2ஆம் பாகம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. முதல் பாகத்தின் பர்னிச்சர்களை உடைத்தது தான் அதிகம். அதற்கு எடுத்துக்காட்டாக எந்திரன் 2.0, இந்தியன் 2, பீட்சா 2, சந்திரமுகி 2 படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியுள்ளன. நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இப்படத்தை 2ஆம் பாகம் எடுக்க முயற்சித்த போது அதற்கு ராமராஜன் உடன்படவில்லை. அவருக்கு தெரிந்திருக்கிறது. இயக்குநர் விக்ரமன் சாருக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் சூர்ய வம்சம் 2வில் சரத்குமார், ஜீவா காம்போ பல ஆச்சர்யங்களை நிகழ்த்தவும் வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.