கடந்த 1997- ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'சூர்யவம்சம்'. இந்த படத்தில் தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


இந்த படத்தில் சரத்குமார் சக்திவேல் கவுண்டர் மற்றும் சின்ராசு ஆகிய இரு வேடத்தில் நடித்திருந்தார். இதில், வில்லனாக நடித்திருந்த ஆனந்த்ராஜின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  அதிலும் நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே என்ற ஒற்றைப் பாடலில் ஹீரோ பணக்காரர் ஆவது போல் காட்டப்பட்டிருந்த சீன், அந்த காலக்கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது மீம் கண்டெண்ட் ஆகவும் மாறி சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. 


மேலும் இந்த படத்தின் வசனங்களும் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதிலும் ”உளி விழும் போது வலின்னு அழுத எந்த கல்லும் சிலையாக முடியாது. ஏர் உழும் போது கஷ்டம்னு நினைக்குற எந்த நிலமும் விளஞ்சி நிக்காது” போன்ற வசனங்கள் குறிப்பிடத்தக்கவை. இப்படத்தில் சரத்குமாரிடம் அவரின் பேரன் ”பாயசம் சாப்டுங்க பிரண்ட்” என்று கூறும் டயலாக் இன்றும் ரசிகர்கள் மனதில் நிற்பவையாக உள்ளது. 


இந்த படம் பார்த்த பின் ஏராளமானோர் பேருந்து வாங்கி தொழில் தொடங்க ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை அந்த காலக்கட்டத்தில் ஏற்படுத்தியது. சொல்லப்போனால் சூர்யவம்சம் படத்தை இன்று டிவியில் ஒளிபரப்பு செய்தாலும் புதிய படம் போன்று அதை ஏராளமானோர் பார்த்து ரசிப்பார்கள். அப்படி ஒரு எவர் க்ரீன் மூவி தான் சூர்யவம்சம். 


இந்நிலையில், 'சூர்யவம்சம்' திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!


விரைவில் சூர்யவம்சம் - 2!..." என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 'சூர்யவம்சம்' இரண்டாம் பாகம் வருவதை சரத்குமார் உறுதி செய்துள்ளார். சூரியவம்சத்தை போன்று அதன் இரண்டாம் பாகமும் ரசிகர்களால் கொண்டாடப்படுமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க 


Maamannan Review: மாமன்னன்.. இவன் மக்களின் மன்னன்...சம்பவம் செய்த மாரி செல்வராஜ்.. முழு விமர்சனம் இதோ...!


Bhim Army Chief Shot: பீம் ஆர்மி தலைவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு கோழைத்தனமானது - முதலமைச்சர் ஸ்டாலின்