‘ சிங்கம் 3’ ‘தானே சேர்ந்த கூட்டம்’ ‘என்.ஜி.கே’ என தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த சூர்யா பெரும் நம்பிக்கையோடு இயக்குநர் கே.வி. ஆனந்துடன் ‘காப்பான்’ படத்தில் இணைந்தார். ஆனால் அந்த படமும் அவருக்கு கை கொடுக்க வில்லை. இதனால் சூர்யாவின் மார்க்கெட்டும் அதளபாதாளத்திற்கு சென்றிருந்தது. இதனால், ஒரு நல்ல கம்பேக்கிறகாக காத்துக்கொண்டிருந்த சூர்யா தனது நீண்ட கால நண்பரான சுதா கொங்கராவிடம் கதை ஏதும் இருக்கிறதா என்று கேட்க, ஏர் டெக்கான் கோபிநாத்தின் வாழ்கை கதை படமாக பண்ணலாம் என்று சுதா சொல்ல, தானே அதை தயாரிப்பதாகவும் கூறி ‘சூரரைப்போற்று’ படத்தில் கமிட் ஆனார் சூர்யா.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில் படத்திற்கான பிரோமோஷனை விமானத்தில் வைத்தது தயாரிப்பு குழு. நிச்சயம் ஹிட்தான் என்ற நினைப்பில் சூர்யா ரசிகர்களும் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்த நேரத்தில், குறுக்கே வந்து நின்றது கொரோனா பெருந்தொற்றும், அதனால் போடப்பட்ட ஊரடங்கும்.
ஏற்கனவே பணப்பிரச்னையால் சிக்கலை சந்தித்த சூர்யா, படத்தை ஓடிடிக்கு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. அவ்வளவுதான், ஒட்டுமொத்த திரையரங்க உரிமையாளர்களும் சூர்யாவிற்கு எதிராக, விமர்சனங்களை வைத்ததோடு, ஒரு வேளை சூர்யா படத்தை நேரடியாக ஓடிடிக்கு கொடுத்தால், சூர்யா ஜோதிகாவின் படங்கள் எதையும் நாங்கள் இனி திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்று போர்கொடி தூக்கினர். ஆனால் எல்லா எதிர்ப்பையும் மீறி சூர்யா சூரரைப்போற்று படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் விற்றார்.
படம் கடந்த 2020 ஆம் ஆண்டு இதே நாளில் (12-11-2022) வெளியானது. ஒரு நல்ல கம்பேக்கிறாக காத்துக்கொண்டிருந்த சூர்யாவிற்கு எதிர்பார்த்தது போல, நல்லதொரு படமாகவே சூரரைப்போற்று அமைந்தது. வாழ்கைகதையை எப்படி ஒரே படத்தில் சொல்லப்போகிறார் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், கேப்டன் ஜிஆர் கோபிநாத் எழுதிய சிம்பிளி ஃப்ளை (வாழ்க்கை கதை) புத்தகத்தில் இருந்து முக்கியமான சம்பவங்களை மட்டும் எடுத்து அதை, திரைக்கதையாக அமைத்து நல்ல மோட்டிவேஷனல் கதையாக சொல்லி இருந்தார் சுதா கொங்கரா.
நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில், ஆக்ரோஷமான இளைஞராகவும்,கனவின் மீது தீரா தாகம் கொண்டவராகவும் சூர்யா வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக, தனது தந்தையை பார்க்க ஃப்ளைட்டில் செல்வதற்காக காத்திருப்பு அறையில் ஒவ்வொருவரிடம் காசு கேட்கும் காட்சியாகட்டும், இடைவேளை காட்சியில் தனது மொத்த கனவும் சிதைந்து போகும் நிற்கதியாய் நின்று, சூர்யா கொடுத்த நடிப்பாகட்டும், தன்னுடைய கனவின் தேவைக்காக மனைவிடம் கடன் கேட்கும் காட்சியாகட்டும், இறுதியில் தனது கிராம மக்களையும், தனது அம்மாவையும் தனது சொந்த ஃபிளைட்டில் ஏற்றி சாதித்து காட்டும் காட்சியாகட்டும் அனைத்திலும் தன்னுடைய வெற்றியின் தாகத்தை பிரதிபலித்திருந்தார் சூர்யா.
சூர்யா மட்டுமல்லாது, அவருக்கு ஜோடியாக நடித்திருந்த அபர்ணா பாலமுரளிக்கும் சூர்யாவுக்கு சமமான அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது. மாறாவை போலவே தன்னுடைய பேக்கரி கனவையும் சாத்தியப்படுத்த துடிக்கும் பொம்மியும் தன்னுடைய சுயமரியாதையை எந்த இடத்திலும், விட்டுக்கொடுக்காமல் படம் முழுக்கவே பயணிப்பார். அது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இவர்கள் மட்டுமல்லாது கருணாஸ், காளி வெங்கட், ஊர்வசி, பூ ராம் உள்ளிட்ட படத்தில் இடம் பெற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே கவனத்தை ஈர்த்து இருந்தன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சுதாவின் திரைக்கதை படத்தின் ஆணிவேராக அமைந்திருந்தது. அவரின் படங்களில் இடம் பெறும் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் ஆக்ரோஷம், இந்தப்படத்திலும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் இருந்தது.
ஒரு காரை சேஸ் காட்சியை எடுப்பதற்கே இயக்குநர்கள் பெரும் பாடு பட்டு கொண்டிருக்கும் போது, சுதா கொங்கரா ஃபிளைட்டை வைத்து படத்தில் எடுத்திருந்த காட்சிகள் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருந்தது. அதே போல படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை வித்தியாசமாக கையாண்டதும் கவத்தை ஈர்த்து இருந்தது. இவை படத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக ஜிவி பிரகாஷ் குமாரின் இசை அமைந்து இருந்தது. ‘பருந்தாகுது ஊர் குருவி’ ‘ காட்டுப்பயலே’ ‘கையிலே ஆகாசம்’ உள்ளிட்ட பாடல்கள் மெகா ஹிட் ஆன நிலையில், பின்னணி இசையை ஹாலிவுட் தரத்திற்கு கொடுத்திருந்தார். ஆக மொத்தத்தில் ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்த கூட்டத்திற்கு சூரரை போற்று மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, பின்னணி இசை, சிறந்த படம் என 5 பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்று தந்தது. ‘நீங்க ஜெயிச்சீட்டிங்க மாறா’..