சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகு கங்குவா படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எல்லா வகையிலும் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் வகையில் கடின உழைப்பை செலுத்தி வருகிறார்கள் படக்குழுவினர். கங்குவா படத்தை காட்சி ரீதியாக மேம்படுத்த படத்தின் ஒளிப்பதிவாளரும் தன் சார்பில் சில புதிய முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அவரது 42-வது படமான கங்குவா இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்க, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் கங்குவா, 10 மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் பல கெட்-அப்களில் சூர்யா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் வெற்றி
சிறுத்தை சிவாவின் முந்தையப் படங்களான வேதாளம் , விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வெற்றி பழனிச்சாமி கங்குவா படத்திற்கும் ஓளிப்பதிவு செய்கிறார். கங்குவா திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அடர்ந்த காடுகளில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதால் எந்த வித லைட்களும் இல்லாமல் இயற்கையான வெளிச்சத்தில் காட்சிகளை படம்பிடித்துள்ளார் வெற்றி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பார்வையாளர்களுக்கு எல்லா வகையிலும் யதார்த்தத்திற்கு நிகரான ஒரு காட்சி அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.
வரவேற்பைப் பெற்ற க்ளிம்ப்ஸ்
முன்னதாக சூர்யா பிறந்தநாளன்று கங்குவா படத்தின் முன்னோட்டம் ஒன்றை வெளியிட்டது படக்குழு. எந்த மாதிரியான ஒரு உலகமாக கங்குவா இருக்கும் என்பதை இந்த முன்னோட்ட வீடியோ உணர்த்தியது.
அக்டோபரில் நிறைவடையும் சூர்யாவின் படப்பிடிப்பு
தற்போது சென்னையில் இருக்கும் இ.வி.பி.ஃபிலிம் சிட்டியில் கங்குவா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள்ளாக சூர்யாவின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிவடைந்து விடும் எனவும் இதனைத் தொடர்ந்து சுதா கொங்கராவுடனான தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளை சூர்யா தொடங்குவார் என கூறப்படுகிறது.