தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒரு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்தது சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம். 2020ம் ஆண்டு சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றதுடன் அந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளை 5 பிரிவுகளின் கீழ் கைப்பற்றியது. விமானி ஜி.ஆர்.கோபிநாத் சொந்த விமான நிறுவனத்தை எடுத்துக் கொண்ட முயற்சியை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது.

மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த 'சூரரைப் போற்று' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார் சுதா கொங்கரா. இப்படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது. சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்துள்ளார்.
ALSO Read | Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ
இப்படம் ஜூலை 12ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது 'சர்ஃபிரா' படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் படக்குழுவினரை வாழ்த்தி போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
"சர்ஃபிரா எப்போதுமே நாம் அனைவருக்கும் மிக முக்கியமான படமாக இருக்கும். அக்ஷய் குமார் சார் உங்களின் 150வது படமாக சர்ஃபிராவை தேர்ந்து எடுத்ததற்கு மிக்க நன்றி. வீர் கதாபாத்திரத்துக்கு மிக அழகாக உயிர் கொடுத்துள்ளீர்கள். சுதா கொங்கரா உங்களின் இந்தக் கனவை நோக்கி பல வருடங்களாக வாழ்ந்து வந்தீர்கள். ராணியாக ராதிகா மதன் சூப்பர். எங்களின் படம் இப்போது திரையரங்கில்.
ஜோ ஒரு டீனேஜராக அக்ஷய் சாரின் போஸ்ட்டரை வைத்திருந்தார். இப்போது அவரின் பெருமைக்குரிய தயாரிப்பாளர். எங்களின் சர்ஃபிரா படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!" என பகிர்ந்துள்ளார்.