பத்திரிகையாளர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ’ஜெய் பீம்’ படத்தை ஜோதிகாவும் சூர்யாவும் தயாரித்திருக்கின்றனர். அமேசானில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தைப் பார்த்துவிட்டு இந்தியா முழுக்க பாராட்டி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் முதனை கிராமத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு 1993-ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தவறே செய்யாமல் காவல்துறையால் லாக்அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கிக்கொடுத்தார், அப்போது வழக்கறிஞராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜெய் பீம் உருவாகியுள்ளது. சூர்யா, சந்துரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், படம் ஓடிடியில் வெளியாகி இருப்பதால் சமூகத்தில் பின்தங்கியுள்ள பழங்குடியின மக்களால் படம் பார்க்க முடியவில்லை. இதனால், தேனி மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக சின்னமனூரில் உள்ள மார்க்கயன்கோட்டை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ‘ஜெய் பீம்’ படத்தை திரையிட்டு காட்டினர்.
மேலும், ‘ஜெய் பீம்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகில் உள்ள பொந்து புளி கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை திண்டுக்கல் மேற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக வழங்கியுள்ளனர். இதனை நடிகர் சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்