தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகரான நடிகர் சூர்யா சமீப காலமாக மிகவும் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தான் நடிக்கும் படங்களுக்காக மிகவும் சிரமத்தை எடுத்து கொள்ளும் சூர்யா நடிப்பில், தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'.
பீரியட் ஜானரில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த பேண்டஸி படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புறநானூறு கேரக்டர் :
அதன் தொடர்ச்சியாக 'ஜெய்பீம்' திரைப்படம் மூலம் கூட்டணி சேர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா - நடிகர் சூர்யா, மீண்டும் 'புறநானூறு' படம் மூலம் இணைகிறார்கள். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். நடிகர் சூர்யா இப்படத்தில் ஒரு கல்லூரி மாணவன் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதால் அதற்கு தகுந்த கெட்டப்பில் வலம் வருகிறார்.
பாலிவுட் அறிமுகம் :
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் சூர்யா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் பல மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பரவி வந்தன. அந்த வகையில் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரத கதையின் பின்னணியில் உருவாகும் 'கர்ணா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யாவின் ஜோடி யார் ?
மிகவும் பிரமாண்டமாக 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ரவிவர்மன் மேற்கொள்ள போகிறார் என்பது படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார் என்ற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது.
ஆனால் இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர், திரௌபதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும், அதற்கான ஸ்க்ரீனிங் டெஸ்ட் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டது என்றும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஜான்வி கபூர் திரௌபதியாக நடிக்க உள்ளார் என்றால் நடிகர் சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் கர்ணா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் இணையும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.