'சர்வைவர்’ நிகழ்ச்சியின் அடிப்படை வடிவமானது Charlie Parsons என்கிற பிரிட்டிஷ் தொலைக்காட்சி தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்டது. 1997-ல் ‘ராபின்சன்’ என்கிற தலைப்பில் ஸ்வீடன் தொலைக்காட்சியில்தான் இது முதன்முதலில் ஒளிபரப்பானது. இதன் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க தொலைக்காட்சியில் ‘சர்வைவர்’ என்கிற பெயர் மாற்றத்துடன் 2000-ம் ஆண்டில் புதிய அவதாரம் எடுத்தது. இதுவரை 40 சீஸன்களைக் கடந்து பெருவாரியான வெற்றியைப் பெற்றிருக்கும் இந்த ரியாலிட்டி ஷோ, அமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றில் அதிக ரேட்டிங் மற்றும் அதிக லாபம் பெற்ற நிகழ்ச்சியாக சாதனை படைத்துள்ளது.


‘பிக்பாஸ்’, ‘மாஸ்டர்செஃப்’ போன்று சர்வதேச ஏரியாக்களில் ஹிட் அடித்திருக்கும் ரியாலிட்டி தொடர்கள், தமிழில் ஏற்கெனவே வரத்தொடங்கிவிட்டன. அதன் சமீபத்திய வரவுதான் ‘சர்வைவர்’. பிக்பாஸ் என்பது வீட்டுக்குள் நிகழும் உளவியல் யுத்தம் என்றால் ‘சர்வைவர்’ என்பது காட்டுக்குள் நிகழும் யுத்தம் என்று சொல்லலாம். முன்னதில் மனவலிமை முக்கியம் என்றால் பின்னதில் மனவலிமையோடு உடல் வலிமையும் மிக முக்கியம். ‘சர்வைவர்’ தமிழ் ஒளிபரப்பு நேற்று இரவு தொடங்கியது. 90 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பதினாறு போட்டியாளர்கள். இயற்கை வளம் சூழ்ந்திருக்கும் ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் விடப்படுவார்கள். மிக அடிப்படையான பொருட்கள் மட்டுமே அவர்களுக்கு தரப்படும். மற்றபடி சமையலுக்கான நெருப்பு முதல் பல விஷயங்களை காட்டுக்குள் அவர்கள் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்.



இரண்டு ட்ரைபுகளாக (Tribe) பிரிக்கப்படும் இரண்டு அணிகளுக்கு இடையில் போட்டிகள் நிகழும். இவற்றில் வெல்வதற்கேற்ப எக்ஸ்ட்ரா வசதிகள் கிடைக்கும். மேலும் போட்டியில் தொடர்வதற்கான, தங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான விஷயங்களை (immunity) அடைவார்கள். பிக்பாஸ் நாமினேஷன் போலவே இதிலும் Tribal Council-ல் ஒருவரை எதிர்த்து வாக்களிக்கும் சடங்கு உண்டு. இதில் பின்னடைவைச் சந்திப்பவர்கள் எலிமினேட் ஆவார்கள். இதுதான் அடிப்படை விதி. மற்றபடி இன்னபிற எக்ஸ்ட்ரா விதிகளும் உண்டு. தங்களுக்குள் சண்டையிட்டு அடித்துக் கொண்டால் போட்டியிலிருந்து அவர் உடனே விலக்கப்படுவது முதற்கொண்டு பல உள்விதிகள் இருக்கின்றன. கடைசிவரை தாக்குப்பிடித்து போட்டியை வெல்பவருக்கு ‘சர்வைவர்’ டைட்டிலோடு ஒரு கோடி ரூபாய் பரிசாகக் கிடைக்கும். ‘சர்வைவர்’ தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் அர்ஜூன். தனது உடலை மிக கச்சிதமாக பராமரித்து வரும் நடிகர்களின் முன்னணி வரிசையில் அர்ஜூனை வைக்கலாம். எனவே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பதற்கு அவர் மிக பொருத்தமானவர் என்று சொல்லலாம்.


அந்த பதினாறு போட்டியாளர்களின் பட்டியல் இதோ:



  1. பெசன்ட் ரவி


ஒரு ஸ்டன்ட் நடிகர். தமிழ் சினிமாவின் பல சண்டைக்காட்சியில் இவரைப் பார்த்திருக்கலாம். நகைச்சுவைக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.



  1. அம்ஜத்கான்


நடிகர். 2010-ம் ஆண்டில் ‘புகைப்படம்’ என்கிற திரைப்படத்தில் அறிமுகமாகிய இவர், ‘மாயா', ‘கைதி’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.



  1. வி.ஜே. பார்வதி


YouTuber, VJ, RJ, நடிகர் என்கிற பல முகங்களைக் கொண்டவர். சமூக வலைத்தளங்களில் மிகப்பிரபலம்.



  1. விக்ராந்த்


நடிகர். 2005-ல் ‘கற்க கசடற’ திரைப்படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.




  1. லட்சுமி பிரியா


நடிகை. தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் அடிப்படையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். நேஷனல் லெவல் கிரிக்கெட் பிளேயர் என்பது குறிப்பிடத்தக்கது.



  1. ஸ்ருஷ்டி டாங்கே


நடிகை. 2010-ல் ‘காதலாகி’ என்கிற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.



  1. லேடி காஷ்


சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபலமான ராப் பாடகர். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா போன்றோர்களின் இசையில் தமிழிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.



  1. காயத்ரி ரெட்டி


இவர் அடிப்படையில் ஒரு மாடல். மிஸ் இந்தியா பட்டத்தை 2016-ல் வென்றுள்ளார். ‘பிகில்’ திரைப்படத்தின் சிங்கப்பெண்களில் ஒருவர்.



  1. உமாபதி ராமையா


நடிகர். ‘அதாகப்பட்டது மகாசனங்களே’ என்கிற திரைப்படத்தில் அறிமுகம். இயக்குநர், நடிகர் தம்பி ராமையாவின் மகன்.



  1. நந்தா


நடிகர். 2002-ல் ‘மெளனம் பேசியதே’ திரைப்படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.



  1. விஜயலட்சுமி


நடிகை. இயக்குநர் அகத்தியனின் மகள். ‘சென்னை-28’ திரைப்படத்தில் அறிமுகம். பிக்பாஸ் நான்காவது சீஸனில் பங்குபெற்ற அனுபவமும் இவருக்கு உண்டு.



  1. இந்திரஜா சங்கர்


நடிகர் ரோபோ சங்கரின் மகள். ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்தவர்.



  1. ஐஸ்வர்யா


விளையாட்டு வீராங்கனை



  1. சரண் சக்தி


நடிகர். ‘கடல்’ திரைப்படத்தில் அறிமுகம். ‘வடசென்னை’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளவர். ‘வடசென்னை’யில் தனுஷ் பெண் பார்க்க வரும் அந்த சீனில் இவரை மறக்க முடியுமா?!



  1. நாராயணன் லக்கி


நடிகர். ‘பயணம்’ திரைப்படம் தொடங்கி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.



  1. ராம்.சி


நடிகர் - ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர்.