ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சி, பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காடர்கள்-வேடர்கள் என இரு அணியாக தனித்தனி தீவில் வசிப்போருக்கு இடையே நடக்கும் டாஸ்க் தான் சர்வைவரின் சிறப்பு.
நேற்று நிகழ்ச்சியில் 46வது எபிசோட் ஒளிப்பரப்பானது. இந்த வாரத் தலைவராக காடர்கள் அணிக்கு விக்ராந்த் மற்றும் வேடர்கள் அணிக்கு ஐஸ்வர்யா ஆகியோர் தேர்வாகியிருந்தனர். இந்த வாரத்திற்கான சலுகைகள் பெறுவதற்கான டாஸ்க் நேற்று நடந்தது. தொடர் தோல்வியில் இருந்த வேடர்கள் அணி, நேற்று சிறப்பாக விளையாடி டாஸ்க்கை நிறைவு செய்தனர். தொடர் டாஸ்க் தோல்வியால், உணவுப் பொருட்கள் இல்லாலும், உணவு இல்லாமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்த வேடர்கள் அணி, நேற்றைய டாஸ்கில் வெற்றி பெற்றதால் தங்களுக்கு சாப்பாடு கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் அர்ஜூன், வெற்றி பெற்ற அணிக்கான சலுகையை அறிவித்தார். அதன் படி வெற்றி பெற்றவர்கள் தீவில், சர்வைவர் ஷாப் இருக்கும் என்றும் அங்கு பொருட்களை வாங்க, அணியினருக்கு சர்வைவர் நாணயங்களை அணித் தலைவர் ஐஸ்வர்யாவிடம் வழங்கினார். அதன் பின் மறைத்து வைத்திருந்த ஓலையை எடுத்து அவர்களுக்கு உணவு தொடர்பான சலுகையை அறிவித்தார். அப்போது தான் தொடங்கியது சர்ச்சை. இதோ அர்ஜூன் அறிவித்த உணவு வகைகள்:
- சாதம்
- மீன் கறி
- மீன் வறுவல்
- சப்பாத்தி
- மிளகு சிக்கன்
- தயிர் சாதம்
- ஊறுகாய்
இவையெல்லாம் உங்களுக்கு தீவில் கிடைக்கும் என அர்ஜூன் அறிவிக்க, ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகும் போதும், அணித் தலைவரான ஐஸ்வர்யா.... ‛சார்... வெஜ்... சார்.... வெஜ்...’ என கேட்டுக் கொண்டே இருக்க, அர்ஜூன் அறிவிப்புக்கு சக போட்டியாளர்கள் குதூகலித்தனர். கடைசி வரை தனக்கான ருசியான சைவ உணவை அர்ஜூன் அறிவிக்காததால் ஐஸ்வர்யா ஏமாற்றம் அடைந்தார். ‛சார்... வெஜ்... எதுவும் இல்லையே... சார்’ என ஐஸ்வர்யா கேட்க, ‛ஓ... நீங்க வெஜ்ஜா...’ என அர்ஜூன் கேட்கிறார். உடனே அவரது அணியில் இருந்தே... ‛அதான் தயிர் சாதம்... ஊறுகாய் இருக்கே...’ என கிண்டலடிக்கின்றனர்.
விளையாட்டு வீராங்கனையான ஐஸ்வர்யா கேரளாவை பூர்விகமாக கொண்டவர். உடற்பயிற்சியில் தேர்ந்தவரான அவர், பரதநாட்டியம், வயலின் உள்ளிட்ட இசை பயிற்சியிலும் தேர்ந்தவர். சுத்தமான சைவ உணவு உட்கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்தவர். ஒரு போட்டி என வரும் போது அவர்களுக்கு பரிசு அளிப்பது இயல்பானதே. பல வாரங்களாக உணவு இல்லாமல் தவிக்கும் ஒரு அணியில், வெற்றி பெற்றால் உணவு என்கிற உத்வேகத்தோடு போட்டி போட்டு வெற்றி பெறும் போது, அங்கு அனைவருக்குமான உணவு இருக்க வேண்டும். இது இயல்பானது. யார் என்ன உணவு எடுப்பார்கள் என்பது அவர்களது உரிமை. அது சைவமோ, அசைவமோ... அது உண்பவர் விருப்பத்தை சேர்ந்தது.
அப்படியிருக்க, ஒரு சைவ போட்டியாளர் இருக்கும் அணியில் அசைவ உணவுகளை பரிசாக கொடுத்து விட்டு, அவர் தனக்கான உணவு வேண்டும் என கேட்கும் போது, தயிர் சாதமும், ஊறுகாயும் இருப்பதாக கூறுவது அது இன்னும் கொடுமையான விசயம். அர்ஜூன் மாதிரியான நடிகர் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் இது மாதிரியான விசயங்கள் சரிபார்க்கப்படாமல் போனது வேதனையே. அதை விட வேதனை, அந்த பரிசை அர்ஜூன் அறிவித்தது தான். அப்போது கூட ஐஸ்வர்யா தனக்கான உணவை கேட்கிறார், ஆனால் அது அங்கு ஏற்கப்படவில்லை என்பதை கடந்து, கிண்டல் செய்யப்பட்டது.
பல நாள் உப்பு சப்பில்லாத உணவும், உணவுக்கு தேவையான எதுவும் இல்லாமல் தவித்து வந்த வேடர்கள் அணிக்கு நேற்று அறிவிக்கப்பட்ட உணவுப்பரிசு நல்ல வேட்டை தான். ஆனால், ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் தயிர்சாதமும், ஊறுகாயும் தான் கிடைத்திருக்கும். உண்மையில் இது, ஒருவரை நோகடித்து மற்றவரை குஷிப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இதை எப்படி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கோட்டை விட்டார்கள் என்கிற கேள்வி தற்போது எழத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் சைவ உணவு உண்பவரை அசைவ உணவு உண்ண கட்டாயப்படுத்தும் முயற்சி இது என பலரும் சர்வைவர் நிகழ்ச்சிக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.