சர்வைவர் நிகழ்ச்சியின் 18 வது எபிசோட் இன்று. மூன்றாம் உலகம் தீவில் இருந்த பார்வதி-காயத்ரி-இந்திரா ஆகியோரில் எலிமினேட் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் போட்டிக்கான இருவரில் காயத்ரி-இந்திரஜா ஆகியோர் தேர்வாகினர். மூளைக்கு வேலை தரும் அந்த போட்டியில், காயத்ரி போராடி வெற்றி பெற்றார். இந்திரஜா இதன் மூலம் சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரை அர்ஜூன் வாழ்த்தி வழியனுப்பினார். இந்த நிலையில், மூன்றாம் உலகம் தீவில் இனி காயத்ரி-பார்வதி ஜோடி தங்கும். அவர்களுக்குள் என்ன நடக்கப் போகிறது? காடர்கள், வேடர்கள் அணிக்கு காத்திருக்கும் சவால் என்ன என்பதிலிருந்து தொடங்குகிறது இன்றைய எபிசோட்!




நீ நில்லு... நீ நில்லு!


வேடர்கள் அணியில் தன் மகள் ஜாரா பிறந்தநாளை வாழ்த்தி மரப்பலகையில் வாழ்த்து செய்தி எழுதி உருகினார். மற்றொரு புறம் பெசண்ட் ரவி-நாராயண் உரையாடினார். ‛நான் வேறு ஒருவருக்கு வாக்களிக்க நினைத்ததாகவும்... ஆனால் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுத்து வாக்கை வாங்கிக் கட்டிக் கொண்டதாக’ பெசன்ட் ரவி பாருவை கடிந்தார். ‛ட்ரைப் லீடரா தேர்வுக்கு நில்லுங்கள்’ என நந்தாவை பெசண்ட் ரவி கூறினார். ஆனால் எனக்கு எதில் உடன்பாடில்லை என்று அவர் கூறினார். மறுபுறம் ஐஸ்வர்யாவை நிற்க நாராயணன் கூறினார். 


சாப்பாட்டுக்கு வழியில்லாதவன் இல்லை...




மற்றொரு புறம் காடர்கள் தீவில், தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட ராமிற்கு சிகிச்சையளிக்க மருத்துவர் வந்த நேரம், விக்ராந்திற்கு நெற்றியில் கட்டை கடித்து ரத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அதே மருத்துவர் விக்ராந்திற்கும் சிகிச்சை அளித்தார். இதற்கிடையில் இரு அணிக்கும் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஓலை வந்து சேர்ந்தது. நல்ல முடிவு எடுக்கும் தலைமையை தேர்வு எடுக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடல்நிலையை காரணம் காட்டி உங்களால் விளையாட முடியுமா என்று விக்ராந்த், ராமிடம் கேட்டார். ‛நீ எப்படி ரிசர்வ்வா வந்தியோ... நானும் அப்படி தான் ரிசர்வ்... மத்தவங்க மாதிரி நான் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருந்ததில்லை... முடிந்த அளவு பின்னாடி பேச மாட்டேன்... நீங்க என்னை குறிப்பிட்டு நெகட்டிவ் வைப்’ என்று கூறினீர்கள் என ராமிடம் கேட்டார். ‛நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை...’ என்று ராம் கூறினார்.


அம்ஜத் கூட்டணி அம்பலம்!




பார்வதி இல்லாததால், அவரது சத்தம் இல்லாதது ஒரு குறையாக இருப்பதாக பெசண்ட் ரவி ,அவரைப் போல இமிடேட் செய்தார். நந்தாவை ட்ரைப் லீடராகுங்கள் என லெட்சுமி ப்ரியா கூறினார். நாராயணனை தேர்வு செய்யலாம் என நந்தா பரிந்துரைத்த போது, அதை லெட்சுமி ப்ரியா ஏற்கவில்லை. இதற்கிடையில் நான் செல்கிறேன் என ஐஸ்வர்யா கூறினார். எனவே அவரோடு இன்னொரு போட்டியாளர் செல்ல வேண்டும். அதற்கு நாராயணனை செல்லுமாறு லெட்சுமி கூறினார். ஆனால் நாராயணன் விரும்பவில்லை. பின்னர் நந்தாவை அழைத்தார் ஐஸ்வர்யா. என் கூட மோத பயமா இருக்கா என ஐஸ்வர்யா கூற, ஆமாம் உண்மை தான் நந்தா ஒப்புக் கொண்டார். நாராயணனுக்கு வாக்கு அளிப்பது தவறான மூவ் என அம்ஜத் கூறினார். அம்ஜத் கூட்டணி வைக்க முடிவு செய்கிறார் என லெட்சுமி புரிந்து கொண்டார். இப்போது தான் ஒவ்வொருவரின் சுயரூபம் வெளியே வருகிறது. 


காதல் சொன்னாரா பாரு...?





பின்னர் இரு போட்டியாளர்களும் லீடர் தேர்வுக்கான டாஸ்க் பகுதிக்கு வந்தடைந்தனர். அர்ஜூன் அவர்களை அழைத்தார். பார்வதி இல்லாததால் தங்கள் தீவில் பறவைகள், கடல் அலை சத்தம் கேட்டதாக நாராயணன் கூறினார். பார்வதியை இமிடேட் செய்து ரவி காண்பிக்க, பார்வதி அனுப்பியதாக ஒரு கடிதத்தை அர்ஜூன் வாசித்தார். நந்தா என் இதயத்தை உடைத்துவிட்டார் என்று அவர் எழுதியிருந்தார். ‛என்னிடம் அவர் காதல் சொல்லவில்லை... நான் அதற்கு பதிலளிக்கவில்லை,’ என்று கிண்டலாக நந்தா பதிலளித்தார். அதன் பின் டாஸ்க் தொடங்கியது.


வேடர்கள் அணியில் நந்தா லீடர்!




வேடர்கள் அணியில் ஐஸ்வர்யா-நந்தா ஆகியோர் லீடர் போட்டிக்கு களமிறங்கினர். நான்கு எடை கொண்ட மூட்டைகளை தோலில் சுமந்து நிற்க வேண்டும் என்பது டாஸ்க். அதே போல காடர்கள் அணியில் உமாபதி-ராம் ஆகியோர் போட்டியிட முன்வந்தனர். இப்போது முதலில் வேடர்கள் அணியின் நந்தா-ஐஸ்வர்யா போட்டிக்கு வந்தனர். பிடிக்காத போட்டியாளர் தோளில் சக அணி போட்டியாளர்கள் எடையை அதிகரிக்கலாம் என அர்ஜூன் அறிவித்தார். நாராயணன், அம்ஜத் ஆகியோர் ஐஸ்வர்யாவுக்கும், ரவி, லெட்சுமி நந்தாவுக்கும் கூடுதல் எடை வைத்தனர். மீண்டும் அதே போல் கூடுதல் எடை ஏற்றப்பட்டது.




30 கிலோ எடையை அவர்கள் இருவரும் சுமந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் எடை ஏறும் என அர்ஜூன் அறிவித்தார். நான்காவது எடை ஏற்றுவதற்கு அர்ஜூன் அழைத்தார். 40 கிலோ எடைக்கு வந்த பின் ஐஸ்வர்யா போராடி தோற்றார். 


காடர்கள் அணியில் உமாபதி லீடர்!




அடுத்ததாக காடர்கள் அணியில் யார் லீடர் என்கிற போட்டி தொடங்கியது. முன்பு குறிப்பிட்டபடி ராம்-உமாபதி போட்டியிட்டனர். அதே எடை டாஸ்க். முதல் 15 நிமிடம் 10 கிலோவில் தொடங்கியது டாஸ்க். போட்டி தொடங்கும் முன்பே இதில் ராமிற்கு பாதகமாக தான் முடிவு வரும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. இரண்டாவது ரவுண்ட் முடிவதற்குள் சுமை தூக்க முடியாமல் ராம் எடையை கீழே போட, எளிதில் உமாபதி வெற்றி பெற்றார். இதன் மூலம் காடர்கள் அணியின் லீடராக உமாபதி வெற்றி பெற்றார். அர்ஜூன் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பின்னர் போட்டியாளர்கள் மத்தியில் வெளியிட்டார். 


வஞ்சம் வைத்து காத்திருக்கும் இருவர்!




மூன்றாம் உலகம் தீவில், தனது அணியில் இருந்து நாராயணன் இங்கு வருவார் என்று பார்வதியும், ராம் வருவார் என்று காயத்ரியும் கூறினர். ராம் வந்தால் சரியான பாடம் கற்பிப்பேன் என்றும் அதற்காக காத்திருப்பதாக காயத்ரி கூறினார். பார்வதி பற்ற வைத்த தீ அது. வேடர்கள் அணியில் நாராயணன் வருவார் என்று கூறிய பார்வதி, அவரை கட்டம் கட்டி அனுப்புவார்கள் என்றும் உறுதியாக கூறினர். ‛என்னுடைய உதவி தேவைப்பட்டால் ராம் செத்தான்...’ என்று வஞ்சத்தோடு கூறினார் காயத்ரி. இப்படி பகையும், புகையுமாக இன்றைய எபிசோட் முடிந்தது. நாளை இன்னும் அனல் பறக்கலாம்.