ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சர்வைவர் நிகழ்ச்சியில் இன்று 16 வது எபிசோட். இரண்டாவது வாரத்தில் இறுதிநாளான நேற்று தோல்வியை தழுவிய வேடர்கள் அணியினர் ட்ரைப் பஞ்சாயத்திற்கு வந்தார்கள். அவர்களிடம் அணியின் தோல்விக்கு யார் காரணம் என அர்ஜூன் கேட்ட போது, தன்னை தவிர ஒட்டு மொத்த அணியினர் மீது பார்வதி குற்றச்சாட்டுகளை வைத்தார். தான் கேப்டனாக இருந்திருந்தால், இங்கு வந்திருக்க மாட்டோம் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அணியினர், ஒட்டுமொத்தமாக பார்வதிக்கு எதிர்ப்பு ஓட்டுகளை பதிவு செய்தனர். இதனால் அதிக ஓட்டுகளை பெற்ற பார்வதி, அணியில் இருந்து பார்வதி எலிமினேட் ஆனார். இந்த பரபரப்பான சூழலில் இன்றைய 16வது எபிசோட் தொடங்கியது...


‛கிங் மேக்கர்’ நந்தா!




பார்வதியை அழைத்த அர்ஜூன், அவரிடம் வெளியேறுவது குறித்து கருத்து கேட்டார் அர்ஜூன். ‛எல்லாருமே நடிக்கிறாங்க... நந்தா சொல்வதை கேட்டு அப்படியே நடிக்கிறாங்க. நந்தா கிங் மேக்கராக செயல்படுகிறார். ஒரு குடும்பத்தில் அனைவரும் ஒன்று தான். ஆனால் அங்கு என்னை ஒதுக்கினார்கள். எல்லோருமே அங்கு நன்றாக நடிக்கிறார்கள்,’ என்றார். ‛ஒருத்தர் இல்லையென்றால் பரவாயில்லை.. எல்லோரும் ஏன் உங்களை வெறுக்கிறார்கள்...’ என்று அர்ஜூன் கேட்டார். ‛ஏன் நீங்கள் வெற்றியை பற்றி சிந்திக்காமல் இதையெல்லாம் சிந்திக்கிறீர்கள்... உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால், நீங்கள் அதை மாற்றுவீர்களா..’ என்று அர்ஜூன் கேட்டார். அப்போது தான் மூன்றாம் உலகம் தீவு குறித்து கேட்டு, அங்கு நீங்கள் செல்லலாம் என்று பார்வதியை அனுப்பி வைத்தார் அர்ஜூன். 


கிழித்து எரியப்பட்ட பார்வதி கடிதம்!




வேடர்கள் அணிக்கு ஒரு கடிதம் வந்தது. அதை லெட்சுமி ப்ரியா எடுத்து, அணியினரை அழைத்தார். அதில் எலிமினேஷனின் போது பார்வதி எழுதிய கடிதம் இருந்தது. பார்வதி எழுப்பிய கேள்விகள் ஒவ்வொன்றாக அதில் இருந்தது. குறிப்பாக ஒவ்வொருவரின் பெயரை குறிப்பிட்டு, அவர்களின் குறைகளை பார்வதி கூறியிருந்தார். நந்தா உதாசினப்படுத்தினார், அம்ஜத் நெகட்டிப்பாக எடுத்துக் கொள்கிறார், ஐஸ்வர்யா முதுகில் குத்தினார், ரவி குறை சொல்வதே வேலை என குறைகளை அடுக்கியிருந்தார். ஆனால் நாராயணை மட்டும் பஃன்கை என பாசிட்டிவாக கூறியிருந்தார். அணியை வாழ்த்தி செல்லாமல், இப்படி வசைபாடியிருக்கிறாரே என அணியினர் கொந்தளித்தனர். ஒரு வாழ்த்து செய்தி கூட இல்லையே என அம்ஜத் பொங்கினார். ‛அவங்க வந்ததே ஒரு பிளானில் தான்...’ என ரவி ஏசினார். அம்ஜத் அந்த கடிதத்தை கிழித்து தன் வெறுப்பை காட்டினார். 


வாய்ப்பை தவற விட்ட இந்திரஜா-காயத்ரி!




மூன்றாம் உலகம் தீவில் பசியில் தவித்துக் கொண்டிருந்த காயத்ரி-இந்திரஜாவிற்கு ஒரு ஓலை வந்தது. கட்டைகளை கொண்டு ஒரு படகு ஏற்பாது செய்து, கடலில் மிதக்கும் மிதவைக்கு சென்றால் ரிவார்டு இருப்பதாக அந்த அறிவிப்பு. உடனே கட்டைகளால் ஒரு படகை தயார் செய்து நீச்சல் தெரியாத அந்த இருவரும் கடலில் பயணிக்க ஆரம்பித்தனர். படகு கவிழ்ந்ததால், காயத்ரியை அமர வைத்து இந்திரஜா படகை கடலில் இறங்கி தள்ளியபடி மிதக்கத் தொடங்கினர். இலக்கை தவிர்த்து வேறு இடம் நோக்கி அவர்களின் மிதவை நகர்ந்தது. இதனால் அவர்களால் இலக்கை நெருங்க முடியாமல் போனது. மீண்டும் கரை திரும்பினர். 


பத்த வெச்ச பார்வதி...!




இதற்கிடையில் மீண்டும் தீவில் உறங்கிக்கொண்டிருந்த இந்திரஜா-காயத்ரி கூடாரத்திற்குள் பார்வதி வந்து சேர்ந்தார். எலிமிவேஷனுக்கு பின் என்ன நடந்தது என்பது குறித்து அவர்களிடம் பார்வதி கூறினார்.  நீங்க ஏன் எலிமினேஷன் ஆனீங்க என இந்திரஜா கேட்டார். அதற்கு வழக்கம் போல 6 பேரும் பிளான் பண்ணி, 6 ஓட்டும் எனக்கு போட்டார்கள்.அதனால் வெளியேற்றப்பட்டேன் என்றார்.  வெளியேறும் போது அழுதீர்களா என்று அவர்கள் பார்வதியிடம் கேட்டனர். ‛நான் ஏன் அழனும்... வண்டை வண்டையா கேட்டுட்டு வந்திருக்கேன்... அவங்க தான் அழனும்...’ என தன் பாணியில் பதில் சொன்னார் பார்வதி. அதற்குள் அவர்களுக்கு எலிமினேட் சேலஞ்ச் வந்து சேர்ந்தது. இப்போது தான் நான் வந்திருக்கிறேன். எனவே இந்த டாஸ்கில் நான் கலந்து கொள்ளவில்லை. நீங்கள் இருவரும் கலந்து கொள்ளுங்கள் என்று பார்வதி கூற, ‛நானும் போன முறை தான் வந்தேன். நான் கலந்து கொள்ளவில்லையா...’ என காயத்ரி லாஜிக் பேச, ‛சரி அங்கு விதிகளின் படி செய்யலாம்’ என டாஸ்க் பகுதிக்கு புறப்பட்டனர். 


மூளைக்கு போட்டி... முட்டி மோதிய காயத்ரி-இந்திரஜா!




மூவரில் யாராவது இருவர் போட்டிக்கு வர அர்ஜூன் அழைத்தார். அவர்களுக்குள் உடன்பாடு இல்லாததால் சர்வைவர் விதிகளின் படி கல் தேர்வு மூலம் போட்டியாளர் தேர்வு நடந்தது. அதில் கருப்பு நிற கல் எடுத்ததால் போட்டியிலிருந்து விலகி பாதுகாப்பான இடத்தை பார்வதி பெற்றார். இந்திரஜா-காயத்ரி போட்டிக்கு அழைக்கப்பட்டனர். நான்கு கட்டைகளை கயிறு சுற்றிய பெட்டிக்குள் இருந்து வெளியேற்றி அவற்றை பஜில் அடிப்படையில் அடுக்க வேண்டும். கட்டையை வெளியேற்றிய அவர்கள், பஜில் முறையில் அடுக்க சிரமப்பட்டனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்களால் முடியவில்லை. பின்னர் அர்ஜூன் ஒரு க்ளூ கொடுத்தார். 


வெளியேறிய இந்திரஜா!




அர்ஜூன் கொடுத்த க்ளூ மூலம் காயத்ரி சரியாக திட்டமிட்டு டாஸ்க்கை முடித்தார். திணறிய இந்திரஜா, ஒரு கட்டத்தில் டாஸ்க் செய்வதை நிறுத்தினார். கடந்த முறை வென்ற அதே காயத்ரி இந்த முறையும் வெற்றி பெற்றார். ஆனால் இந்திரஜா இந்த முறை போராட முடியாமல் போட்டியில் தோற்றார். அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. தீவை விட்டு வெளியேறுவது வருத்தமளிப்பதாகவும், தனது பெற்றோரின் நம்பிக்கையை ஏமாற்றிவிட்டேன் என்று வருந்தினார். தோற்றாலும் நான் உழைத்திருக்கிறேன். ஆனால், இந்திரஜா வீட்டுக்கு போவதற்காக தோற்றார் என்று பார்வதி கருத்து தெரிவித்தார். கனத்த இதயத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்திரஜா. இனி பார்வதியை காயத்ரி சமாளிக்க வேண்டும். பார்க்கலாம் நாளை! மூன்றாம் உலகம் அதிருமா... அடங்குமா என்று!