ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சர்வைவர் நிகழ்ச்சியில் இன்று 12 வது எபிசோட். எதிர்பார்த்தபடியே விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது நிகழ்ச்சி. அர்ஜூன் தரும் டாஸ்க் அனைத்தும் தமிழ் பார்வையாளர்களுக்கு புதிது என்பதால், சுவாரஸ்யம் சுற்றி வளைக்கிறது. நேற்று நடந்த மூன்றாவது டாஸ்கில் முதலில் காடர்கள் அணி வேகமாய் செயல்பட்டாலும், வழக்கம் போல விவேகமாய் செயல்பட்ட வேடர்கள் அணி இறுதியில் வெற்றி பெற்று, மூன்றாவது வெற்றியை முழுமையாக பதிவு செய்தனர். போட்டி துவங்கும் முன் ஓவர் பில்டப் கொடுத்து புதிய லீடர் விஜயலட்சுமி தலைமையில் களமிறங்கிய காடர்கள் அணி, இந்த முறையும் மண்ணை கவ்வியது. வெற்றி பெற்ற வேடர்கள் அணிக்கு சமைப்பதற்கு தேவையான ஸ்பைசஸ் வழங்கப்பட்டது. தவிர, வேடர்கள் லீடர் அஜ்மல்கானுக்கு ஒரு ஜக் நிறைய ஜூஸ் கொடுக்கப்பட்டது. அதை அவர் லெட்சுமி ப்ரியாவுடன் பகிர்ந்து கொண்டார்.






வெற்றி பெற்றாமலும் சுயதோல்வி அடைந்ததாக கருதும் வேடர்கள் அணி பார்வதி ஒருபுறம், தொடர் தோல்வியால் துவண்டு போன காடர்கள் அணியின் செயல்பாடு என இன்றைய எபிசோட் இதோ...


தண்டனை ஏற்ற விஜயலட்சுமி!




இன்றைய எபிசோடில் காடர் அணிக்கு எடுத்த எடுப்பிலேயே ஓலை வந்திருந்தது. நேற்றைய டாஸ்கில் மோசமான செயல்பாடு கொண்டவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், அவருக்கு ஒரு தண்டனை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்வாகும் நபர், ஒருவரை சமரசம் செய்து உடன் ஒருவரை தண்டனைக்கு அழைத்த வர வேண்டும். அவர்கள் ஒரு பொருளை அரைக்க வேண்டும் என்பது தண்டனை. பஸ்ஸல் ரவுண்டில் நான் ஒரு தவறு செய்தேன் எனவே நான் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் என்று விஜயலட்சுமி தெரிவித்தார். தான் இப்போது விக்ராந்த், உமாபதி, சரண் உடன் மிங்கில் ஆகிவிட்டதாக கேடி கேஸிடம் ராம் தெரிவித்தார். 




‛அப்பா... அம்மாவை பார்க்கனும்....’ -இந்திரஜா!


இதற்கிடையில் வெற்றி பெற்ற வேடர்கள் அணிக்கு வந்த ஓலையில், அவர்களுக்கு கிடைத்த அஞ்சறை பெட்டியை வைத்து என்ஜாய் பண்ணுங்க என வாழ்த்து கடிதம் இருந்தது. மசாலாவை பார்த்ததும் அவர்கள் துள்ளிக் குதித்தனர். லெமன் ரைஸ் செய்ய அந்த அணி தயாரானது. இது இப்படியென்றாம் வெளியேற்றப்பட்ட காயத்ரி, இந்திரஜா இருவரும் உள்ள மூன்றாம் உலகம் தீவி மோசமான சூழலில் இருந்தது. உணவின்றி, தண்ணீரின்றி இருவரும் தவித்தனர். பெற்றோரை பிரிந்த சோகத்தில் இந்திரஜா அழுது புலம்பினார். சாப்பாடு இல்லாதது அவர்களை ரொம்பவே பாதித்திருந்தது. 


‛எனக்கு பச்சையா தெரியுது... -பார்வதி’




இந்நிலையில் ஷோ குறித்து பார்வதி ஏதோ சொல்லித்தருவதாக ஐஸ்வர்யா உடன் பேச, கடைசியில் அந்த இரவில் அவர்கள் இருவரும் கடுமையாக சண்டையிட்டு கொண்டனர். கேமரா முன்னாடி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான டிப்ஸ் கொடுக்கும் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடே அந்த சண்டைக்கு காரணம். நந்தாவிடம் வந்த ஐஸ்வர்யா, பார்வதி உடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்திருக்கலாம் என்று தன் கருத்தை தெரிவித்தார். பேசியது தவறில்லை... ரெம்ப நேரம் பேசியது தான் பிரச்சினை என நந்தா பேசினார். இந்த விவகாரத்தால் தனிமையில் பார்வதி உட்கார்ந்திருந்தார்.




அவரை அழைத்து லெட்சுமி ப்ரியா பேசினார். அப்போது நீங்கள் நல்லவராக பேசியதாக நினைக்க வேண்டாம், ஆனால் எனக்கு எதிராக ஒரு குரூப் உள்ளது. அதில் நீங்களும் ஒருவர் தான் என பகிரங்கமாக லெட்சுமி ப்ரியா மீதும் அணியினர் மீதும் பார்வதி குற்றம்சாட்டினார். என் மீதான பிரச்சினையை என்னிடம் தெரிவிக்காமல், ஒரு குரூப்பாக ஆலோசிக்கின்றனர். அது பச்சையா தெரியது... எனக்கு என பார்வதி மீண்டும் சூடானார். 




‛தனித்தனியாக அழைத்து பேசிய பார்வதி‛


இந்த முறை யாரை நாமினேஷன் செய்யலாம் என பெசன்ட் ரவி, அம்ஜத்திடம் லெட்சுமி கேட்ட போது, அவர்கள் பார்வதி பெயரை கூறினர். பின்னர் லீடர் அம்ஜத்தை அழைத்த பார்வதி, ‛நீங்கள் என்னை தவறாக சித்தரிக்கிறீர்கள்’ என்று கூறினார். ‛நான் கடந்த வாரம் அவ்வாறு அப்படி இருந்தேன்... இந்த வாரம் அவ்வாறு இல்லை... இனி அவ்வாறு இருக்க மாட்டேன்.’ என்று அம்ஜத் கூறினார். பின்னர் பார்வதி இல்லாமல், வேடர்கள் இணைந்து பேசினர். ‛இனி அவரிடம் பேசுவதால் எந்த பயனும் இல்லை..’ லெட்சுமி ப்ரியா கூறினார், லெட்சுமி ப்ரியா, அம்ஜத்தை தொடர்ந்து நாராயணனிடமும் பார்வதி தனியாக அழைத்து பேசினார். அவர் மீதிருந்த தவறை நாராயணன் சுட்டிக்காட்டினார். ஆனால் வழக்கம் போல பார்வதி அதை ஏற்பதாக இல்லை. தன் தரப்பை மட்டுமே அவர் கூறிக்கொண்டிருந்தார். 




கடல் நீரை மிஞ்சிய கண்ணீர்!


பின்னர் கிடைத்த மசாலா உடன் சுவையான உணவை சமைத்த வேடர்கள் அணி, ருசியான உணவை நீண்ட இடைவெளிக்குப் பின் உண்டு மகிழ்ந்தனர். பின்னர் ஆண் போட்டியாளர்கள் தனியாக சந்தித்து பார்வதி பைட் குறித்து ஆலோசித்தனர். நமது சண்டை டாஸ்கில் இருக்கக் கூடாது. காடர் அணியை அடுத்தடுத்து வீழ்த்த வேண்டும் என்று  அவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். இந்த நேரத்தில் இரு அணிக்கும் தனித்தனி ஓலை சென்றது. யாருக்கு நன்றி... யாருக்கு ஸாரி... என்கிற தலைப்பில் போட்டியாளர்கள் பேச வேண்டும். இந்த டாஸ்க் அறிவித்ததுமே தெரியும், இன்றைய எபிசோட் கடல் நீரை விட அதிக கண்ணீரில் நிரம்பப்போகிறது என்று. அது தான் நடந்தது. போட்டி போட்டு போட்டியாளர்கள் ஸாரி சொல்லும் போது அழத்தொடங்கினர். 




நன்றி சொல்லும் போது எல்லோருமே மகிழ்வோடு அதை பகிர்ந்தனர். ஆனால் மன்னிப்பு கேட்கும் நபர் என வரும் போது, அனைவருமே கண்ணீர் மல்க கூறினர். அதில் உமாபதி மட்டும் விதிவிலக்கு. அத்தோடு அந்த டாஸ்க் நாளையும் தொடர உள்ளது. நாளை ஆட்டம் பாட்டம் என டாஸ்க் வேறு விதமாக போகிறது. பார்க்கலாம் நாளைய நாளை!