செப்டம்பர் 17ம் தேதி இந்தியா முழுக்க அதிக அளவில் கோவிட் -19 தடுப்பூசிகள் போடப்பட்டன. அந்த நாளில் இந்தியா முழுக்க இரண்டரை கோடி தடுப்பூசிகள் போடப்பட்டன. பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அந்த நாளில் கோவின் இணையதளத்தில் அதிகம் தடுப்பூசி போடப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவு பிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாஜக ஆட்சியில் உள்ள கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தை ஆகிய மாநிலங்களை விட செப்டம்பர் 17ம் தேதி பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில்தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்நிலையில் செப்டம்பர் 17ம் தேதி நள்ளிரவு வரை அங்கு 33,98,685 தடுப்பூசிகள் போடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது.
அந்த மாநிலத்தில் மற்ற நாட்களில் சராசரியாக 2000 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டன, ஆனால் செப்டம்பர் 17 அன்று, எண்ணிக்கை தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 14,483 ஆக உயர்த்தப்பட்டது. தடுப்பூசி போடுவதற்கும் அவற்றின் தரவை ஆன்லைனில் பதிவேற்றுவதற்கும் மட்டும் அங்கு 50,000 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் அதற்கு பின்னால் சுகாதார பணியாளர்களுக்கும், டேட்டா எண்ட்ரி ஆப்பரேடர்களுக்கும் மிகப்பெரிய அழுத்தம் அரசு சார்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போல செப்டம்பர் 17ம் தேதி அதிக தடுப்பூசிகள் போடப்பட்டதாக காண்பிப்பதற்கு அதற்கு முந்தைய நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவரின் விபரங்களும் பதிவுசெய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
பீகாரைப் பொறுத்தவரை செப்டம்பர் 16 அன்று 1,333 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டன, கோவினில் 86,253 பேர் தடுப்பூசிகள் போடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. அதேபோல செப்டம்பர் 15ல் 1,45,593 தடுப்பூசிகள் போடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. ஆனால் செப்டம்பர் 17, பிரதமர் மோடியின் பிறந்தநாளில் சுமார் 34 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
குறிப்பாக தர்பாங்கா போன்ற மாநிலங்களில் செப்டம்பர் 16ம் தேதி 752 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்ட நிலையில் 17ம் தேதி 11,000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அது தொடர்பான விவரங்களும் கோவின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டன. அதேபோல லகிசரை மாவட்டத்தில் முந்தைய நாளில் 752 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்ட நிலையில் செப்டம்பர் 17ம் தேதி 31,388 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில் பெரிய அளவில் தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முகாம்களுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் சில அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கொரோனா மூன்றாம் அலை வருமா எனும் அச்சம் மக்களிடம் இருக்கும் சூழலில் தடுப்பூசிதான் பேராயுதமாக உள்ளது. மோடியின் பிறந்தநாளில் செய்ய முடிந்ததை மற்ற நாட்களிலும் செய்யலாமே என பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.