ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் எதிர்பார்ப்பையும், ஆதரவையும் பெற்ற சர்வைவர் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி வெற்றியாளர் யார் என்பதை அறியும் டாஸ்குகள் இந்த வாரம் தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே போட்டியிலிருந்து கடந்த இரு வாரங்களாக அடுத்தடுத்து நந்தா மற்றும் அம்ஜத் ஆகியோர் வெளியேறினர். ஓட்டெடுப்பு மூலம் அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் முதல் நேரடியாக போட்டிகள் துவங்கின.
அதுமட்டுமின்றி ஓட்டெடுப்பு முறை மற்றும் வேறு எந்த இமினிட்டி டாஸ்க்குகளும் இல்லாமல், நேரடியாக இறுதி வெற்றியாளருக்கான போட்டிகள் குழு முறையில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் ஒளிபரப்பான மூன்று கட்டங்களாக முடிக்க வேண்டிய டாஸ்க் போட்டியில், உமாபதி-ஐஸ்வர்யா, விக்ராந்த்-இனிகோ, சரண்-விஜயலட்சுமி, நாராயணன்-வேனசா ஆகியோர் குழுக்களாக பங்கேற்றனர்.
இதில் சிறப்பாக விளையாடிய உமாபதி-ஐஸ்வர்யா ஜோடி முதலில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்து யார் வெற்றி பெறுவார்கள், கடைசியில் வந்து யார் வெளியேற்றப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் நேற்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் எதிர்பார்த்ததைப் போல, சரண்-விஜயலட்சுமி ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்து, அடுத்த சுற்றுக்கு தேர்வானது.
அதன் பின் விக்ராந்த்-இனிகோ மற்றும் நாராயணன்-வேனசா ஜோடிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் நாராயணன்-வேனசா ஜோடி அடுத்தடுத்து இறுதி டாஸ்கை சிறப்பாக முடித்து வெற்றி பெற்றனர். கடைசி வரை போராடி இறுதி டாஸ்கில் ஒரு பந்தை கூட குழியில் சேர்க்காத விக்ராந்த்-இனிகோ ஜோடி படுதோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
காடர்கள் என்கிற பெயரில் தொடர்ந்து குழுவாக செயல்பட்டு வந்த விக்ராந்த் தலைமையிலான அணிக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது. சைலண்ட் தலைவராக இருந்த விக்ராந்த்தும், தொடர்ந்து புறம் பேசி, அறம் மறந்து விளையாடிய இனிகோவும் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டது, போட்டியை இன்னும் சூடிபிடிக்க வைத்துள்ளது. வேடர்கள் அணியை தொடர்ந்து டார்க்கெட் செய்து வந்த காடர்கள் அணியின் முக்கிய இருவர் வெளியேறியிருப்பது, வேடர்கள் அணியை சேர்ந்த ஐஸ்வர்யா மற்றும் நாராயணனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‛கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..’ என்பதைப் போல இனிகோவின் தோல்வியை ஒரு தரப்பு கொண்டாடி வருகிறது. ‛உன் ராஜதந்திம் அனைத்தும் வீணா போச்சே...’ என விக்ராந்தையும் கிண்டல் செய்கின்றனர் சமூகவலைதள வாசிகள். எஞ்சியிருக்கும் உமாபதி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, நாராயணன், வேனேசா ஆகியோரில், யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்