‘வணங்கான்’ படம் ட்ராப் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அந்தப்படத்தின் தற்போதைய நிலை குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது. 


தமிழ் சினிமாவில் தனித்தன்மை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவரான பாலா   ‘வணங்கான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவே தயாரித்து நடிக்கிறார். ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் நிலையில் பிரபல இசையமைப்பாளர்  ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த நிலையில், படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கும் பாலாவுக்கு இடையே மோதல் நடந்ததாகவும், அதனால் அந்தப்படம் கைவிடப்படுவதாகவும் தகவல் வெளியானது.


 






இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தானும் பாலாவும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து நாங்கள் விரைவில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். இதனால் அந்த பிரச்னை குறித்தான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே  ‘வாடிவாசல்’ படத்திற்காக சூர்யா தயாராகும் வீடியோ, அதனைத்தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் சூர்யா இணையும் படமான  ‘சூர்யா41’ பூஜை தொடர்பான அறிவிப்பு என பல அப்டேட்கள் வெளியானது.


 






இந்த நிலையில்  ‘வணங்கான்’படத்தின் நிலை என்ன ஆனது என்பது குறித்தான கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. இந்த நிலையில் அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம் சண்டை பயிற்சியாளர்  ஷிஹான் ஹூசைனி இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு பகிர்ந்து இருக்கிறார். 


ஷிஹான் ஹூசைனி பேட்டி 


இது குறித்து அவர் பேசும் போது, “ ‘வணங்கான்’ படத்தில் நான் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப்படத்திற்காக புதுவிதமான தோற்றத்தை முயற்சி செய்யுமாறு படக்குழு கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக நான் என்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன். ஷூட்டிங் எப்போது வேண்டுமானும் தொடங்கலாம்” என்று பேசியிருக்கிறார். முன்னதாக ஷிஹான் ஹூசைனி விஜயின்  ‘பத்ரி’ ‘காத்து வாக்குல  ரெண்டு காதல்’ நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே  ‘சூரரைப்போற்று’, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள்,  விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டரின் வெற்றியால் சூர்யாவின் அடுத்தடுத்து படங்களின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் சூரரைப்போற்று படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 


 






சாக்லேட் பாயாக வலம் வந்த சூர்யாவை 2001ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தின் மூலம் டோட்டலாக மாற்றி காட்டினார் பாலா. அதன் தாக்கம் 2003ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்திலும் எதிரொலித்தது. சூர்யாவுக்குள் இருக்கும் நடிப்புத் திறமையும் வெளிவந்தது. இதன்  காரணமாக  பாலா மீது சூர்யாவுக்கு எப்போதும் தனி பிரியமும், மரியாதையும் உள்ளது. அதன் காரணமாகவே பாலா எடுத்த அவன் -இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடிக்க காரணமாக அமைந்தது.