கமலா திரையரங்கில் ரீரிலீஸ்


பல வருடங்களுக்கு முன்பு வெளியாகிய படங்கள் இன்று புதிய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்தப் படங்களை திரையரங்கில் அவர்கள் பார்க்கும் வகையில் ரீரிலீஸ் செய்யப்படுகின்றன. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி , நாயகன் , ஆளவந்தான், தேவர்மகன், வேட்டையாடு விளையாடு, சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, தனுஷ் நடித்த மயக்கம் என்ன, 3 உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இன்றைய தலைமுறை ரசிகர்கர்களால் கொண்டாடப்படுகின்றன.


மேலும் இந்தப் படங்களைப் பார்க்க திரையரங்குகளுக்கு கூட்டம் குவிந்து நல்ல வசூலும் கிடைக்கிறது.  இந்த மாதிரியான படங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது சென்னை கமலா திரையரங்கம். தற்போது கமலா திரையரங்கள் வாரணம் ஆயிரம் படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. வாரணம் ஆயிரம் படத்திற்கான முன்பதிவுகள் இன்று மாலை 6 : 30 மணி முதல் தொடங்க இருக்கிறது.






வாரணம் ஆயிரம்


சூர்யா நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம். கெளதம் மேனன் இப்படத்தை இயக்கினார். சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில்  நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இப்படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது சென்னை கமலா திரையரங்கம்.


தந்தை மகன்


தந்தை - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா இப்படத்தில் நடித்திருந்தார். தனது தந்தை கிருஷ்ணனின் இறப்புச் செய்தியைக் கேட்டதும் சூர்யா தனது இளமைக் காலம் முதல் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார். தனது வாழ்க்கையில் பள்ளிப்பருவம் முதல் காதல், இழப்பு, சோகம், மீட்பு என எல்லாக் கட்டத்திலும் தனது தந்தையின் இருப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கிறது என்பதை சூர்யாவின் பார்வையில் நடக்கும் கதையே வாரணம் ஆயிரம். 


மூன்று காதல் கதைகள்


சூர்யாவின் பெற்றோர் கிருஷ்ணன் மற்றும் மாலினி ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது, அவர்களின் காதல், சூர்யா மேக்னாவை ஒரு ரயிலில் பார்ப்பது, பார்த்த உடனே காதலில் விழுவது, மேகனவைத் தேடி அமெரிக்கா போவது, மேக்னாவை பிரிவது, கடும் போதைப் பழக்கத்திற்கு ஆளாவது, அதில் இருந்து மீள வெளியே கிளம்பி செல்வது, கடைசியாக ப்ரியாவை சந்திப்பது, ப்ரியா சூர்யாவை காதலிப்பது, சூர்யா ராணுவத்தில் சேர்வது, ப்ரியாவை திருமணம் செய்து கொள்வது, இப்படி காதல் , ஆக்‌ஷன் , டிராமா, பயணம் என எல்லா வகைமைக்குள்ளும் வாரணம் ஆயிரம் படத்தை பொருத்திப் பார்க்கலாம் என்பதே 15 ஆண்டுகளுக்குப் பின்பும் இந்தப் படம் சலிப்படையாமல் இருப்பதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.


மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் அஞ்சல பாடலை ரசிகர்கள் திரையரங்கத்தில் ஆட்டம் போட்டு பாட்டு பாடிக் கொண்டாட ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.