தொடர்ந்து பயோகிராபி கதை அம்சங்களை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. அவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று அமேசான் ஓடிடி-யில் சக்கைபோடு போட்டது. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் நடிப்பில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வருகின்ற தீபாவளி வெளியீடாக நவம்பர் 2ல் ஒடிடியில் வரவிருக்கிறது.
இதையடுத்து படம் குறித்து PinkVilla தளத்துக்குப் பேசியுள்ள சூர்யா தான் நடித்ததிலேயே சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டும் முக்கியமான படங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‘நம்மை சுற்றி சக்திவாய்ந்த மனிதர்கள் இருப்பது பெருமையாக உள்ளது. ஒரு தனிநபரால் பெரிய மாற்றம் கொண்டுவர முடிவதைக் கற்று உணரும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு தனிமனிதரின் தீர்ப்பால் 25000 பேருக்கு வேலை கிடைத்தது. அதுதான் ஜெய்பீம் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறோம். சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் படத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.
சூரரைப் போற்று மாறாவை போல ஜெய்பீம் படத்தில் வரும் சந்துருவும் ஒரு புரட்சிக்காரன்.பெரும்பாலான மனித உரிமை வழக்குகளில் சந்துரு ஒரு பைசா கூட வாங்கிக்கொள்ளாமல் வாதாடிக் கொடுத்துள்ளார். இதுபோன்ற படங்களில் நடிப்பதன் மூலம் எனக்குப் பொறுப்பு அதிகம் கூடுவதாக உணர்கிறேன். இந்தப் படங்கள் பல மொழிகளில் வெளியாகிறது. பலர் இந்தப் படத்தைப் பார்க்கிறார்கள்.அதனால் சேலஞ்சும் எனக்கு அதிகரிக்கிறது. இன்னும் சிறப்பான படங்களில் நடிக்கவேண்டும் என்கிற உந்துதல் ஏற்படுகிறது.இப்போது ஜெய்பீம் படத்துக்கு என்றே ஒரு ஆடியன்ஸ் பட்டாளம் உருவாகியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், லிஜோமோல், ரஜீஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.