தமிழ் திரையிலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர் மற்ற கலைஞர்களில் இருந்து பெரிதும் வித்தியாசமானவர். பெரும்பாலானோருக்கு விஜய் சேதுபதியின் குடும்பத்தினரை தெரியாது. விஜய் சேதுபதியும் அவர்களை பொதுவெளியில் காட்ட விரும்பவில்லை.
ஆனால், விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடிப்பில் தந்தை போல் கெட்டிக்காரராக திகழ்ந்து வருகிறார். நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் 2015 ஆம் ஆண்டு திரையுலகில் அடியெடுத்து வைத்தார் அவர். அதன் பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் படத்தில் படம் நெடுக விஜய் சேதுபதியுடன் வரும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பார்.
சிந்துபாத் படம் தோல்வி அடைந்தாலும் அதில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. விஜய் சேதுபதியும் அவரது மகன் சூர்யாவும் சிந்துபாத் படத்தில் தென்காசியை சேர்ந்த திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்கள். இதில் விஜய் சேதுபதிக்கு இணையாக அவரது மகன் சூர்யாவின் நடிப்பையும் அவரது ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர்.
வளர்ந்த பிறகு கதாநாயகனாக நடிப்பதற்கான அத்தனை தகுதிகளையும் வளர்த்து வருகிறார் சூர்யா. விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் நட்பாக பழகும் தந்தையாக இருந்து வருகிறார். அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. சூர்யா விஜய் சேதுபதியின் கண்ணத்தை கடிக்கும் செல்பி புகைப்படம் பெரிய அளவில் வைரலானது.
சிந்துபாத் படத்தின் சண்டை காட்சிக்கான பயிற்சியில் விஜய்சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா வலியில் கத்தும்போதும், அவரது முழு திறமையை காட்டவேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி எந்த உதவியும் செய்யவில்லை. பயிற்சி முடிந்த பிறகு வலியில் தவித்த மகனுக்கு தனது டிரேட் மார்க் முத்தத்தை வழங்கினார்.
இயல்பாகவே விஜய் சேதுபதிபோல் பல பரிணாமங்களில் நடிக்கும் நடிகராக சூர்யா திகழ்வார் என்ற பேச்சு திரையுலகில் எழுத் தொடங்கி இருக்கிறது. அனுபவம் வாய்ந்த தென் இந்திய நடிகரை போல் சண்டை காட்சிகளை இயல்புடன் சூர்யா செய்வதாகவும், குத்துவது, உதைவது, தடுப்பது என அனைத்தையும் திறம்பட சூர்யா செய்வதாக அந்த வீடியோவை பார்த்தவர்கள் கருத்திட்டு வருகின்றனர்.
நானும் ரவுடி தான், சிந்துபாத் படங்களின் வரிசையில் விஜய் சேதுபதியும் அவரது மகன் சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து அதை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர்.