தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுபவர் நடிகர் ’விவேக்’. வெறுமனே காமெடி என்ற பெயரில் மற்றவர்களை தரைக்குறைவாக நடத்தாமல், தனது நகைச்சுவையில் ஆழ்ந்த கருத்துக்களை விரும்பும் ஒரே நடிகர் விவேக். கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி மாராடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்பு  ஒட்டு மொத்த திரையுலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும்  அதிர்ச்சியடைய செய்தது. 




இந்நிலையில் விவேக் , சிவாவுடன் இணைந்து  இறுதியாக பணியாற்றிய நிகழ்ச்சியின் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அமேசான் பிரைமில் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஒளிப்பரப்பாக உள்ள ‘LoL- Last of laughing எங்க சிரி பார்ப்போம்” என்ற நிகழ்ச்சியின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த டீசர் விவேக் அவர்களுக்கு ட்ரிப்யூட் செய்வதாக அமைந்துள்ளது. இதுவே விவேக் அவர்களின் இறுதி நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலைநாடுகளில் பிரபலமான இவ்வகை ஸ்டாண்டப் காமெடி நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் குக் வித் கோமாளி புகழ் , அபிஷேக் , ஆர்த்தி, பிரேம் ஜி, பவர் ஸ்டார் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.  இந்த நிகழ்ச்சியின் புரமோவை பார்த்த ரசிகர்கள் ‘வி மிஸ் யூ விவேக் சார்’ என உருக்கமான பதிவுகளை கமெண்டுகள் வாயிலாக தெரிவித்து வருகிறனர்.


ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் நடிகர் சூர்யா ,  ‘LoL- Last of laughing எங்க சிரி பார்ப்போம்”  நிகழ்ச்சியின் புரமோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து விவேக் அவர்கள் குறித்து உருக்கமான நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் ”அவர் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்வார்,எங்களை சிரிக்கவைத்த மற்றும் சமூகப் பொறுப்புள்ள முற்போக்கு சிந்தனைகளையும் பரப்பிய விவேக் சாரின் இறுதி நிகழ்ச்சியின் புரமோவை பகிர்வதை நான் கௌவுரவமாக கருதுகிறேன் “ என குறிப்பிட்டுள்ளார்.






விவேக் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த சமூக செயற்பாட்டாளர்.  முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் காலம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றியவர்.  கலாம் அவர்கள்  இவரிடம் கூறிய வார்த்தைக்காகவே  பல ஊர்களில் மரக்கன்றுகளை  நடத் தொடங்கினார்.  இதுவரையில் முப்பது லட்சத்திற்கும் மேலாக மரக்கன்றுகளை நட்டுள்ளார். உயிர் பிரிந்த நாளுக்கு முதல் நாள் கூட கொரோனா தடுப்பூசி  போட்டுக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார். இவரின் இழப்பு திரையுலகம் , தமிழ் சமுதாயம் மட்டுமல்லாது மரம் செடி , கொடிகளுக்கும் பேரிழப்புதான் என்றால் மிகையில்லை .