ரெட்ரோ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி வெளியானது. சூர்யாவின் முந்தைய படமான கங்குவா திரைப்படம் பெரியளவில் வெற்றிபெறாத நிலையில் ரெட்ரோ படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கார்த்திக் சுப்பராஜின் திரைக்கதை , சூர்யாவின் நடிப்பு , சந்தோஷ் நாராயணனின் இசை என படத்தில் நிறைய பிளஸ் பாயிண்ட்கள் இருந்தன. அடுத்தடுத்த நாட்களில் வசூலில் ஏற்றம்காணவே செய்தது. முதல் நாளில் ரெட்ரோ படம் ரூ 46 கோடி வசூலித்தது. தொடர்ந்து 5 நாளில் உலகளவில் ரூ 104 கோடி வசூலித்தது.
ரெட்ரோ வெற்றியா ? தோல்வியா ?
வெகுஜ சினிமாவைப் பொறுத்தவரை வசூலே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கின்றன. குறிப்பாக பான் இந்தியா என்கிற கருத்தாக்கத்திற்கு பின் ஸ்டார்களின் படங்கள் 500 கோடி 1000 கோடி வசூல் ஈட்டினாலே அவை வெற்றிபடங்களாக கருதப்படுகின்றன. இதனால் நடிகர்களும் சரி இயக்குநர்களும் சரி வசூலை முதன்மையாக வைத்தே கதைகளை அனுகுகிறார். சூர்யா நடிப்பில் முன்னதாக வெளியான கங்குவா திரைப்படமும் இதே சுழற்சியில் சிக்கி அடிவாங்கியது. படம் வெளியாவதற்கு முன்பே 1000 கோடி 2000 கோடி என படக்குழு மிகையான எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. எதார்த்தத்தில் கங்குவா படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமே ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இப்படியான சூழலில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஒரு வழக்கமான கமர்சியல் படத்திற்கு பல புதுமையான முயற்சிகளை கார்த்திக் சுப்பராஜ் செய்திருப்பதாக படம் பிடித்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரெட்ரோ பாக்ஸ் ஆபிஸ்
ரெட்ரோ பட வசூல் ரீதியாக தோல்வி படம் என சமூக வலைதளத்தில் சிலர் குறிப்பிட்டு வந்தார்கள். படம் பெரிய வசூல் எல்லாம் இல்லை ஆனால் அதை மறைக்க படக்குழு வெற்றிவிழா கொண்டாடியதாக சிலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால் ரெட்ரோ படத்திற்கு திரையரங்குகளில் தொடர்ச்சியான மக்கள் வருகை இருந்து வருகிறது. 500 கோடி 1000 கோடி இல்லை என்றாலும் நிலையான ஓட்டத்தில் செமையான ஒரு வசூலை எடுத்துள்ளது படம்.
ரெட்ரோ உலகளவில் ரூ 235 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.