BJP Politics: ஆப்ரேஷன் சிந்தூரை விமர்சித்த பேராசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பேராசிரியர் கைது:
”ஆப்ரேஷன் சிந்தூர்” தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக, ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை இணைப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் நேற்று கைது செய்யப்பட்டார். இதனை குறிப்பிட்டு மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா, ராணுவ அதிகாரிகள் சோஃபியா குரேஷி, வியோமிகா சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசியும் கைது செய்யப்படவில்லை. ஆனால், அலி கான் மட்டும் கைது செய்யப்பட்டது ஏன்? என காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி போன்ற எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இது ஆளும் தரப்பினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது சமுக வலைதள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொங்கி எழுந்த மாதர் சங்கம்:
பெண் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டதாக, அலி கான் மீது ஹரியான மாநில மகளிர் ஆணைய தலைவர் ரேணு பாட்டியா என்பவர் புகாரளித்துள்ளார். இப்படி கிடைத்த 2 புகார்களின் அடிப்படையில், ”இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்தல், பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அறிக்கைகள், பெண்ணை அவமதிக்கும் நோக்கில் வேண்டுமென்றே செயல்கள் மற்றும் மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், பெண் ராணுவ அதிகாரிகளை மத அடிப்படையில் அடையாளப்படுத்திய, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய் ஷா மீது எந்த ஒரு மகளிர் ஆணையமும் புகாரளிக்கவில்லை. காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
அமைதியான காவல்துறை:
அதேநேரம், மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் நேரடி நடவடிக்கையால் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்ற விஜய் ஷாவின் கோரிக்கை அங்கும் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும், தற்போது வரை காவல்துறை விஜய் ஷாவிடம் விசாரணையும் மேற்கொள்ளவில்லை, எந்தவித வாக்குமூலத்தையும் கூட வாங்கவில்லை, யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், பெண் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பேசியதாக இணை பேராசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை குறிப்பிட்டு, “இது தான் மோடி தலைமையிலான புதிய இந்தியாவின் நிலை” என பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
”பேர் தான் பிரச்னையே”
காங்கிரஸ் தலைவர் பவன் கேரா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பது தான் மோடி தலைமையிலான அரசு. கேள்விகளுக்கும், நாட்டின் சொந்த குடிமக்களையுமே பார்த்து இந்த அரசு அச்சம் கொண்டுள்ளது. எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகியோர் எதிர்களாக முத்திரை குத்தப்படும்போது, ஜனநாயகமே எதிரியாக கருதப்படுகிறது. அலி கான் செய்த தவறு கருத்தை பதிவிட்டது. மற்றொரு தவறு அவருடைய பெயர் தான்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது அலி கான் ஒரு இஸ்லாமியர் என்பதால் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் சாடியுள்ளது.