தா.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து நவம்பர் மாதத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஜெய்பீம். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். படம் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கும் நிலையில் தணிக்கைக் குழு தற்போது இந்தத் திரைப்படத்துக்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ஒன்றுக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்படுவது இது இரண்டாம் முறை கடைசியாக 2010ல் வெளியான ரத்த சரித்திரம் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1993ல் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.






மேலும் இந்தப் படம் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார் படத்தின் இயக்குநர் ஞானவேல். ஜெய்பீம் திரைப்படம் மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும், ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து வேறு எந்தப்படமும் இவ்வளவு ஆழமாகப் பேசியதில்லை. முதன்முதலாக ஜெய்பீம் படத்தில் நாங்கள் அந்தப் பணியைச் செய்திருக்கிறோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவில் ’ஜெய் பீம்’ என்கிற சொல் பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவர்கள் பயன்படுத்தும் சொல்லாடல். பீம் என்றால் அம்பேத்கரைக் குறிப்பது.


ஜெய் என்றால் இந்தியில் வெற்றி என்று பொருள். ஜெய் பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி என்பது பொருள். 1936ல் அம்பேத்கரின் பிறந்தநாள் சமயத்தில் மும்பை சால் பகுதியில் அவரது ஆதரவாளர் ஒருவர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜெய்பீம் எனச் சொன்னதாகவும். பிறகு பெரும்பான்மையான மக்கள் அந்தச் சொல்லை உபயோகிக்கத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 1 ஜனவரி 1818ல் கோரேகான் போர் சமயத்தில் பீமா நதியைக் கடந்த வீரர்கள் ஜெய்பீம் என முழங்கிச் சென்றதாலும் இந்த பெயர் உருவானதாக கூறப்படுகிறது. அம்பேத்கர் ஒவ்வொரு வருடமும் கோரேகான் பகுதிக்குச் சென்று போர் நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்தி வந்தார். இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, பொருளாதார வல்லுநர், பெண்ணியவாதி, கல்வியாளர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒற்றைக்குரலாக ஒலித்தவர் பாபாசாகேப் அம்பேத்கர். மிக முக்கியமாக இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களில் முதன்மையானவர். தற்போது அவரது பெயரையொட்டிதான் சூர்யாவின் 39-வது படத்துக்கும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.