தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் சுமார் இரண்டரை ஆண்டுகால இடைவெளியில் வெளியாகும் திரைப்படம் கங்குவா.


கங்குவா நாளை ரிலீஸ்:


700 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம் நாளை உலகெங்கும் ரிலீசாகிறது.


சுமார் 350 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது. இந்த சூழலில், நாளை வெளியாகும் கங்குவா படத்தின் வெற்றியை சூர்யா மிகப்பெரிய  அளவில் நம்பியுள்ளார்.


கடைசி ப்ளாக்பஸ்டர் சிங்கம் 2:


நேருக்கு நேர் படம் மூலமாக நாயகனாக அறிமுகமான சூர்யா, நந்தா படத்திற்கு பிறகு புதிய பரிணாமம் எடுக்கத் தொடங்கினார். மௌனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், கஜினி, பேரழகன், சில்லுனு ஒரு காதல், வேல் என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் வாரணம் ஆயிரம் படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கே சென்றார்.


அடுத்தடுத்து அயன், ஆதவன், சிங்கம், 7ம் அறிவு படங்கள் மூலமாக விஜய், அஜித்திற்கு நிகரான புகழைப் பெற்றார். கடினமான உழைப்பு, நடிப்புத் திறமை, கட்டுக்கோப்பான உடல் என தனித்துவம் மிக்கவராக உயர்ந்து நின்ற சூர்யாவின் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான சிங்கம் 2 படம் சிங்கம் படத்தை காட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அஞ்சானில் தொடங்கிய தோல்விப்பயணம்:


அதன்பின்பு, ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் அஞ்சான். 2014ம் ஆண்டு வெளியான அஞ்சான் படம் சூர்யாவின் திரை வாழ்வில் இதுவரை இல்லாத அளவிற்கு படுதோல்வியைச் சந்தித்தது. அந்த படம் தந்த தோல்வி சூர்யாவின் ஒட்டுமொத்த திரைவாழ்வையுமே திருப்பிப் போட்டது என்றே கூறலாம்.


2014ம் ஆண்டு வெளியான அஞ்சான் படம் முதல் அதற்கு அடுத்து வெளியான மாஸ் என்கிற மாசிலாமணி, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே. காப்பான், எதற்கும் துணிந்தவன் என திரையரங்கில் வெளியான எந்த படமும் அஞ்சானுக்கு முன்பு பெற்ற வெற்றியைப் பெறவில்லை. இதில், 24, தானா சேந்த கூட்டம், எதற்கும் துணிந்தவன் தோல்விப்படங்களாகவே அமைந்தது.


சூரரைப் போற்று, ஜெய்பீம்:


ஆனால், கொரோனா கால நெருக்கடியில் 2020ம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் ஓடிடி தளமான அமேசானில் வெளியான சூரரைப் போற்று படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 2021ம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் அமேசான் தளத்தில் வெளியான ஜெய்பீம் படம் தமிழ்நாடே கொண்டாடும் படைப்பாக மாறியது. சூர்யாவின் திரை வாழ்விலே என்றுமே மறக்க முடியாத இந்த இரு படங்களையும் திரையரங்கில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் வெளியிட்டதற்கு ரசிகர்கள் பலரும் வேதனை தெரிவித்தனர். ஆனாலும், மிகப்பெரிய வெற்றியை இந்த இரு படங்களும் வெற்றி பெற்றது.


11 ஆண்டு கால தாகம்:


சூரரைப் போற்று, ஜெய்பீம் தந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் நேரடியாக திரையரங்கில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன். 2021ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியதால் இந்த படம் தோல்வி அடைந்தது.


2013ம் ஆண்டு வெளியான சிங்கம் 2 படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு கடந்த 11 ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியான ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை. 11 ஆண்டுகால ஏக்கத்தை கங்குவா படம் தீர்த்து வைக்குமா? என்பது நாளை தெரிந்துவிடும்.