ஜனநாயகன் படத்துடன் மோதும் சூர்யாவின் கருப்பு
எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கேவிஎன் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே , பாபி தியோல் , பிரியாமணி , கெளதம் மேனன் , பிரகாஷ் ராஜ் , மமிதா பைஜூ ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.
2026 ஆம் பொங்கலுக்கு ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய இரு படங்கள் வெளியாக உள்ளதாக இதுவரை அறிவிப்பு வெளியாகியுள்ளன. டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்காரா இயக்கி வரும் படம் பராசக்தி. சிவகார்த்திகேயன் , அதர்வா , ஶ்ரீலீலா , ரவி மோகன் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஜி.வி பிரகாஷ் தனது 100 ஆவது படமாக இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட அதே நாளில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியானது.
தற்போது இந்த போட்டியில் மூன்றாவதாக இணைந்துள்ளது சூர்யாவின் கருப்பு. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45 ஆவது படமாக உருவாகியுள்ள படம் கருப்பு , ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கருப்பு படத்தில் த்ரிஷா , ஸ்வாசிகா , ஆர் ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளத்தில் மோதல் தொடங்கியுள்ளது
ஒரே நாளில் வெளியான விஜய் சூர்யா படங்கள்
விஜய் மற்றும் சூர்யா நடித்த படங்கள் இதுவரை ஐந்து முறை திரையரங்கில் ஒன்றாக வெளியாகியுள்ளன. ஷாஜகான் - நந்தா , யூத் - ஶ்ரீ , திருமலை - பிதாமகன் , அழகிய தமிழ் மகன் - வேல் , வேலாயுதம் - 7 ஆம் அறிவு . கடைசியாக வெளியான வேலாயுதம் - 7 ஆம் அறிவு போட்டியில் சூர்யாவின் 7 ஆம் அறிவு திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. தற்போது 6 ஆவது முறையாக பாக்ஸ் ஆபிஸில் விஜய் சூர்யா படங்கள் ஒன்றாக திரையரங்கில் வெளியாக இருக்கின்றன. இரு படங்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம். இது தவிர்த்து பராசக்தி படத்திற்கு ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.