தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா நல்ல திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 

 

அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா.  இதில் திஷா பதானி , பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யு வி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மட்டுமின்றி  38 மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ளது. 

 

 


 

இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இது வரை தமிழ் சினிமாவில் பார்த்திருக்க முடியாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் என கூறப்படுகிறது. 

 


 

 

நடிகர் சூர்யாவின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஆதி நெருப்பே.. ஆறாத நெருப்பே...' பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பட்டையை கிளப்பும் இந்த பாடலின் வரிகளை விவேக் மற்றும் மதன் கார்க்கி எழுதியுள்ளனர்.  மேலும் பாடல் வரிகளுக்கு குரலால் உயிர் கொடுத்துள்ளனர் செந்தில் கணேஷ், மகாலிங்கம், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ்.  


 

 





 


 

மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் சூர்யா கையில் வாள் ஏந்திய படி மிரட்டியுள்ளார். ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற சர்வதேச அளவில் பிரபலமான நாட்டு நாட்டு... பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித் தான் இந்த 'ஆதி நெருப்பே...' பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

வெளியாக சில நிமிடங்களிலேயே இப்பாடல் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பெற்றுவிட்டது.  

 

தற்போது வெளியாகியுள்ள இந்த பாடல் 'கங்குவா' படம் குறித்த எதிர்பார்ப்பை பல மடங்காக அதிகரித்துள்ளது. இது வரையில் நடிகர் சூர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.