கங்குவா


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கங்குவா படம் உலகளவில் 2000 கோடி வசூலிக்கும் என இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பல இடங்களில் தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் என படம் குறித்து சூர்யாவும் தெரிவித்திருந்தார். கொடுத்த பில்டப்பிற்கு மாறாக கங்குவா திரைப்படத்திற்கு அதிகம் நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. திரைக்கதை மட்டுமில்லாமல் படத்தில் தொழில்நுட்பரீதியாகவும் பல குறைகளை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்திற்கு இதே போல் ப்ரோமோஷன் நடந்து அந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமியை பலர் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்தார்கள். அதேபோல் தற்போது கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் படத்தின் இயக்குநர் மட்டும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை பலர் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்துவருகிறார்கள். கங்குவா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருவது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விளக்கமளித்துள்ளார்.


கங்குவா விமர்சனம் பற்றி ஞானவேல்ராஜா


" கங்குவா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் ரசிகர்கள் இப்படத்தின் கதையை விமர்சிக்கவில்லை. நாங்கள் நேற்று திரையரங்கில் சென்று ரசிகர்களின் ரெஸ்பான்ஸை பார்த்தோம் குறிப்பாக தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்திற்கு கொடுத்திருக்கும் வரவேற்பு அபரிமிதமானது. ஒரு சில ட்ரோல்களையும் இணையத்தில் பார்த்தேன். அது எல்லா படங்களுக்கும் வருவது தான் . தி கோட் படம் கூட முதல் நாள் ட்ரோல் செய்யப்பட்டது . அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என நம்புகிறேன். அடுத்த ஆண்டு கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளை தொடங்க இருக்கிறோம். இரண்டாம் பாகம் இன்னும் வைல்டாக இருக்கும்" என ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.