கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியது. இந்தி , தமிழ் , கன்னடம், தெலுங்கு , ஆங்கிலம் என மொத்தம் ஆறு மொழிகளில் கங்குவா திரைப்படம் வெளியாகியது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை 350 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு மும்பை , டெல்லி , கர்னாடகா , ஆந்திரா தெலங்கானா என பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ப்ரோமோட் செய்தார் சூர்யா. இந்திய சினிமாவின் அடையாளத்தையே கங்குவா திரைப்படம் மாற்றப்போகிறது என பேசப்பட்ட கங்குவா தற்போது ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
கங்குவா திரைப்படத்தின் குறைகள்
ஒரு தரப்பினர் கங்குவா படத்தை புகழ்ந்தாலும் ரசிகர்கள் தரப்பில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. படத்தின் திரைக்கதை மிக முக்கியமான ஒரு குறைபாடாக கருதப்படுகிறது. பிரம்மாண்டத்தை காட்டுவதில் கானம் செலுத்திய படக்குழு திரைக்கதையில் இருக்கும் மிக எளிய தவறுகளை கவனிக்காமல் விட்டதே ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. அடுத்தபடியாக படத்தில் அத்தனை நடிகர்கள் இருந்து சூர்யாவைத் தவிர ஒருத்தருக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரம் வழங்கப்படவில்லை. நடிப்பிற்காக கொண்டாடப்பட்ட சூர்யாவே இப்படத்தில் நடிப்பிக் திணறியுள்ளதை யாரிடம் சென்று சொல்ல. ப்ரோடக்ஷன் ரீதியாகவும் , தொழில்நுட்பரீதியாகவும் படம் நன்றாகவே உருவாகியிருந்தாலும் எமோஷனலாக படத்துடன் ஒன்ற முடியாததே கங்குவா படத்தின் மிகப்பெரிய பல்வீனமாக கருதப்படுகிறது.
கங்குவா பாக்ஸ் ஆபிஸ்
கங்குவா திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ 127 கோடி வரை வசூலித்துள்ளது. படம் வெளியாவதற்கு முன் 1000 கோடி 2000 கோடி என்று எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அமரன் பட வசூலை கூட படம் கடக்குமா என்பது தற்போது கேள்வியாக இருக்கிறது. கங்குவா படம் வட மாநிலங்களில் மட்டுமே 3500 திரையரங்குகளில் வெளியாகியது. இதற்காக மட்டுமே படக்குழுவினர் 22 கோடி வரை செலவிட்டுள்ளார்கள். ஆனால் படம் வெளியாகி நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த செலவில் பாதிக்கூட படம் திருப்பி எடுக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கங்குவா திரைப்படம் வட மாநிலங்களில் மட்டும் இதுவரை ரூ 10.62 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இனி வரும் நாட்களில் படத்திற்கான வசூல் பெரியளவில் அதிகரித்தால் மட்டுமே பெரியளவிலான நஷ்டத்தை தவிர்க்க முடியும் என சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.