இந்த டீசரில் சூர்யா சொல்லும் பெருமாச்சி என்கிற சொல்லிற்கு தலைவன் என்று அர்த்தம்.


கங்குவா




சூர்யா நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் திஷா பதானி நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இந்த டீசரில் சூர்யா , பாபி தியோல் உள்ளடக்கிய பல்வேறு பிரம்மாண்டமான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ள வி.எஃப் .எக்ஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த டீசரை அடிப்படையாக வைத்து கங்குவா எந்த மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்பதை ஆராயலாம்.


கங்குவா டீசர்  (Kanguva Teaser Breakdown)




சரித்திர கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படம் எந்த வித நிஜ கதையோடும் நேரடியாக தொடர்புடையது இல்லை என்று படக்குழு முன்பே தெரிவித்திருந்தது. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சரித்திர வீரனின் கதையை மையப்படுத்தி இந்தப் படம் கற்பனை செய்யப் பட்டிருக்கிறது. பொதுவாக இந்த மாதிரியான பிரம்மாண்டமான சரித்திர கதைகள் எடுக்கப் படுகின்றன என்றால் அதில் ரசிகர்களுக்கு இருக்கும் பெரிய பயம் கதை நன்றாக இருந்து வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் சொதப்பி விடுமோ என்பது தான். அந்த வகையில் கங்குவா டீசர் அந்த பயத்தை போக்கியிருக்கிறது. போர் நடக்கும் காட்சிகள் , சண்டைக் காட்சிகள். கதாபாத்திரங்களின் தோற்றங்கள் குறிப்பாக முதலையின் கண்கள் வரும் காட்சிகள் என கங்குவா படத்தில் வி.எஃப். எக்ஸ் காட்சிகளுக்கு சிறப்பு கவனம் கொடுக்கப் பட்டிருப்பது தெரிகிறது.




சரித்திர கதைகள் எல்லாவற்றிலும் நாம் ஒரு பொதுவான கதைசொல்லல் அம்சத்தைப் பார்க்கலாம். பல்வேறு தனித்துவங்களைக் கொண்ட வெவ்வேறு இனக்குழுக்கள் தங்களது எல்லைகளில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்த இனக்குழுக்களுக்கு இடையில் அதிகாரத்திற்காக, உணவுக்காக, அரசியல் காரணங்களுக்காக  என பல காரணங்களுக்காக மோதல்கள் ஏற்படும். ஆங்கிலத்தில் வெளியான கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் வைகிங்ஸ் போன்ற தொடர்களின் இந்த மாதிரியான கதை சொல்லல்களை நாம் பார்த்திருக்கிறோம். கங்குவா படத்தில் இதே மாதிரியான ஒரு கதையம்சம் இருப்பது இந்த டீசர் மூலம் தெரியவருகிறது. இரண்டு பழங்குடி இன குழுக்கள். ஒன்றை சூர்யா வழி நடத்துகிறார், மற்றொன்றை பாபி தியோல் வழிநடத்துகிறார். வெவேறு சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்ட இந்த இரண்டு குழுக்கள் தங்களுக்கு இடையில் கடுமையாக போர் செய்கிறார்கள். இதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது, யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.




சூர்யாவின் தோற்றம்


மேலும் இப்படத்தில் எந்த கதாபாத்திரமும் நல்லவர், கெட்டவர் என்கிற கோணத்தில் இருந்து காட்டப்படவில்லை என்றும் இரு தரப்பினருக்கு தங்களுடைய நியாயங்கள் இருக்கின்றன என்று படக்குழு தெரிவித்திருந்தது. இதன்படி கங்குவாவாக நடித்திருக்கும் சூர்யாவை நாம் நல்ல காரியங்கள் செய்யும் ஹீரோவாக மட்டும் பார்க்க மாட்டோம் என்பது தெரிகிறது.


கொடூரமான கொலைகளை செய்யும் ஒரு காட்டுமிராண்டித் தனம் அவரிடம் இருப்பதை இந்த டீசரில் பார்க்கலாம். சூர்யாவின் கங்குவா கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது கேம் ஆஃப் த்ரோன்ஸில் வரும் பழங்குடி இனத்தின் தலைவனாக வரும் கால் த்ரோகோ நினைவுக்கு வருகிறார். சூர்யாவின் தோற்றம் முதற்கொண்டு பல இடங்களில் இருவருக்கும் இடையில் ஒற்றுமைகள் தென்படுகின்றன. அடிப்படையில் நல்லவனாக இருந்தாலும் செயல்களில் பார்க்க கொடூரமான ஒரு தலைவனாக சூர்யா இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். டீசரின் இறுதியில் சூர்யா பெருமாச்சி என்று கத்துகிறார். இந்த சொல்லுக்கு ஒரு இனக்குழுவின் தலைவன் என்று பொருள். 





மேலும் உதிரனாக நடித்திருக்கும் பாபி தியோலும் இந்தப் படத்தில் ரசிகர்களை கவர்வார் என்று நிச்சயமாக சொல்லமுடியும். தன்னுடைய இன மக்களால் போற்றப்படும் ஒரு தலைவனாக இருக்கும் உதிரன் கங்குவாவுடன் ஏன் போர் செய்கிறான் என்பதை படம் வெளியான பின் தான் சொல்ல முடியும்


மொத்தத்தில் சிறுத்தை சிவா ஏதோ  சொதப்பப் போகிறார் என்கிற பயத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது கங்குவா டீசர்!