ரெட்ரோ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கி அட்லூரி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் லக்கி பாஸ்கர் படத்தை போன்ற ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திற்கு வித்தியாசம் காட்ட நினைப்பவர். அந்த வகையில் இப்படம் அவரது நடிப்பிற்கு தீனி போடும் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில், பல கெட்டப்புகளில் வரும் சூர்யா கெட்டவர்களை பழிவாங்கும் நாயகனாக வருகிறார். கருப்பு கோர்ட் அணிந்த அய்யணாரகவும், காவல் காக்கும் கருப்புசாமியாகவும் சூர்யா வருகிறார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் சூர்யா, வாடிவாசல் படம் எப்போது என கோலிவுட்டே காத்திருக்கிறது. வெற்றிமாறன் - சூர்யா காம்போவில் இப்படம் வெளியானால் உலக சினிமா தரத்திற்கு இருக்கும் என்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்திருக்கிறார். அந்த அளவிற்கு அந்த படத்தின் மேக்கிங் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

படப்பிடிப்பு தேதி அடிக்கடி மாற்றப்பட்ட ஒரே படம் வாடிவாசல் என்ற சாதனையை முறியடிக்குமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. இந்நிலையில், ஃபகத் பாசிலை வைத்து மாபெரும் வெற்றியை கொடுத்த ஆவேஷம் பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. கதையும் சூர்யாவிற்கு மிகவும் பிடித்து விட்டதாம். சூர்யாவுக்கு பழக்கப்பட்ட கதாப்பாத்திரமாக இருந்தாலும், கதை புதிது எனக் கூறப்படுகிறது. சூர்யா மீண்டும் இப்படத்தின் மூலம் காக்கி சட்டை அணிய இருக்கிறார். மிடுக்கான, விரைப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம். 

சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்த காக்க காக்க, சிங்கம் சீரிஸ் படங்கள் அனைத்துமே இவருக்கு ஹிட் படங்களாக உள்ளது. சிங்கம் சூர்யாவின் கரியரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாகவும் அமைந்தது. அந்த வரிசையில் அவரது அடுத்த படமும் இருக்கும் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இயக்குநர் ஜித்து மாதவன் - சூர்யா காம்போவில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.