நடிகர் சூர்யா மகாபாரதத்தை அடிப்படையாக கொண்ட இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவில் சூர்யா 


நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யா இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் கடந்தாண்டு ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து கமல் நடித்த விக்ரம் படத்தில் ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதேபோல் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார். 


இதற்கிடையில் பாலா இயக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஷுட்டிங் நடைபெற்ற ‘வணங்கான்’ படத்தில் இருந்து சில காரணங்களால் சூர்யா விலகினார். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 42வது பட அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்னும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது.


வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கங்குவா படம் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியில் அறிமுகம்? 


இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் ​​ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படும் நிலையில், அது உறுதியானால் சூர்யா இந்தியில் நடிக்கும் முதல் படமாக இது அமையும். மகாபாராத கதையில் வரும் கர்ணன் கேரக்டரை மையப்படுத்தி இரண்டு பாகங்கள் கொண்ட படமாக இது உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 


கர்ணனை மையப்படுத்திய படம் என்பது  ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் கனவுத் திட்டம் ஆகும். இதற்காக அவர் பல காலமாக பணியாற்றி வருகிறார். பான் இந்திய படமாக இப்படம் வெளியாகும் என்றும், விரைவில் இப்படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.