நடிகர் சூர்யாவிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் வித்தையை சூர்யா கற்றுக்கொண்டது 2001ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தில். அவருக்கு கற்றுக்கொடுத்தது இயக்குநர் பாலா. அதன் பிறகு பாலா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான  'பிதாமகன்+' படத்தில் சூர்யா தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தார். இதன் காரணமாக பாலா மீது சூர்யாவுக்கு எப்போதும் தனி பிரியமும், மரியாதையும் எப்போதும் உண்டு. 









அதன் வெளிப்பாடுதான்  'அவன் இவன்' திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்தது. ‘நான் கடவுள்’ படத்திற்கு பிறகு பாலாவின் படைப்புகளில், அவர் இயக்கிய முந்தைய படங்களில் இருந்த அழுத்தம் குறைவாகவே இருந்தது. அது அவரின் வணிக வெற்றியையும் பாதித்தது. இதனையடுத்து வந்த  ‘பரதேசி’ படம் முழுக்க முழுக்க பாலாவின் படமாக இருந்து, பாராட்டுகளை பெற்ற போதும், அந்தப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது.




அதனைத்தொடர்ந்து வந்த நாச்சியாரும் அதே வரிசையில் இணைந்து கொண்டது. நிலைமை இப்படி போய்க்கொண்டிருக்க, விக்ரம் மகன் துருவ்வை வைத்து பாலா இயக்கிய வர்மா படம் பாலாவின் திரை வாழ்க்கையை புரட்டி போட்டது. அந்தப்படத்தால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த பாலா, அதன் பின்னர் எங்கே போனார் என்றே தெரியவில்லை.


இந்த நிலையில்தான் திடிரென்று பாலா இயக்கும் படத்தில் நான் நடிக்கிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா. இந்த நிலையில், இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்சிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த தகவல்களின் படி, சூர்யா இந்தப்படத்தில்  காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த கதாபாத்திரத்திற்கான ஹோம் வொர்க்கில் சூர்யா இறங்கிவிட்டதாகவும், இந்தப்படத்திற்காக மதுரையில் செட் போடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்திற்காக, சூர்யா 60 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், சூர்யா இதில் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்தப்படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறதாம்.