தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல நல்ல படங்களை தயாரித்து வருகிறார். பல சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர் சூர்யா. அந்த வகையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமான தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் பல மொழிகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூர்யா 44. சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி ஒன்று வெளியானது. அதில் நடிகர் சூர்யா ரெட்ரோ தோற்றத்தில் மிகவும் ஸ்டைலிஷாக வந்தது ரசிகர்களை கவர்ந்தது. எனவே இதுவும் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சூர்யா 44 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியிலும் நடைபெற்று நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது இடுக்கியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊட்டியில் நடைபெற்ற ஷூட்டிங் சமயத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஸ்ரேயா இணைந்து நடனமாடிய பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. ரஜினி, விக்ரம், தனுஷ், விஜய் என பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தவர். அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் மீண்டும் சூர்யா 44 படத்தின் மூலம் குத்து பாட்டுக்கு நடனமாடியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக அமையும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
70% நிறைவடைந்து விட்டதாகவும் முழு படப்பிடிப்பும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கார்த்திக் சுப்புராஜ் - ஸ்ரேயா காம்போவில் உருவாகும் முதல் படம். அக்ஷன், காமெடி கலந்த ரொமான்டிக் படம் என கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.