நடிகர் சூர்யாவின் 47 ஆவது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. மலையாளத்தில் ரோமாஞ்சம் ,  ஆவேஷம் ஆகிய  படங்களை இயக்கிய  ஜீத்து மாதவன் இப்படத்தை இயக்கவிருக்கிறார். நஸ்ரியா இப்படத்தில் நாயகியாக தமிழுக்கு திரும்புகிறார்.

Continues below advertisement

எதற்கும் துணிந்தவன் , கங்குவா என அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பின் ரெட்ரோ படத்தில் ஒரு குட்டி கம்பேக் கொடுத்தார் சூர்யா. அடுத்தபடியாக அவர் நடிக்கவிருக்கும் படங்கள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் கருப்பு படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா46 இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று சூர்யாவின் அடுத்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது 

ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 

மலையாளத்தில் ரோமான்ச்சம் படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடையே கவனமீர்த்தவர் ஜீத்து மாதவன். தொடர்ந்து ஃபகத் ஃபாசிலை வைத்து இவர் இயக்கிய ஆவேஷம் படம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிப்படமாகவும் அமைந்தது. காமெடி , த்ரில்லர் என இரண்டு ஜானர்களிலும் புகுந்து விளையாடக்கூடிய ஜீத்து மாதவன் அடுத்தபடியாக சூர்யாவுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் பிரேமலு , லோகா ஆகிய படங்களில் நடித்த  நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். 11 வருடங்களுக்குப் பின் மீண்டும் நஸ்ரியா தமிழுக்கு திரும்புகிறார்.(அண்மையில் அவர் நடித்த ' த மெட்ராஸ் மிஸ்ட்ரி' வெப்சீரிஸ் ஓடிடியில் வெளியானது). பல வைரல் மலையாள பாட்டிற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சிங்கம் மாதிரியான ஒரு முரட்டு போலீஸ் ஆபிஸராக சூர்யா இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் ஆவலைக் காட்டி வருகிறார்கள். 

Continues below advertisement

சூர்யாவுடன் நஸ்ரியா முன்னதாக சுதா கொங்காரா இயக்கவிருந்த புறநாநூறு படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி இயக்குநர்களுடன் பணியாற்றுவதில் சூர்யா தீவிரம் காட்டி வருகிறார். அடுத்தபடியாக இந்தியிலும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது .