ஆர்.ஜே பாலாஜி


ரேடியோவில் ஆர் ஜேவாக தனது பயணத்தை தொடங்கி தற்போது சூர்யா 45 படத்தை இயக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. சினிமாவில் நகைச்சுவை நடிகராக நல்ல வரவேற்பு இருந்தாலும் அவர் அதோடு நிற்காமல் திரைப்படங்களை இயக்குவது மீது ஆர்வம் காட்டி வருகிறார். முன்னதாக எல்.கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் என இரு படங்களை இயக்கியிருந்தாலும் இந்த இரண்டும் காமெடி என்டர்டெயினர் படங்கள். முதல் முறையாக மாஸான ஒரு என்டர்டெயினர் படத்த அவர் எப்படி கையாளப்போகிறார் என்பதை பார்த்த  ஒட்டுமொத்த திரை ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். 


காய்ச்சலுடன் தளபதி பார்க்க அழைத்துச் சென்ற அம்மா


ஆர்.ஜே பாலாஜியின் பழைய காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் அவர் ரஜினியின் தளபதி மற்றும் கமலின் குணா படம் வெளியானபோது தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். " தளபதி படம் வெளியானபோது எனக்கு காய்ச்சல் அடித்தது. காய்ச்சலோடு என் அம்மா என்னை தளபதி படம் பார்க்க கூட்டிப்போனார். ஆனால் அங்கு போனவுடன் தெரிந்தது ஹவுஸ் ஃபுல் டிக்கெட் கிடைக்காது என்று. என் அம்மா உடனே சரி இந்த ஷோ போய் கமலின் குணா படம் பார்க்கலாம் பாதி படத்தில் எழுந்து வந்து டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கலாம் என்று சொன்னார்.


குணா பாதி படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது அம்மா எழுந்து தளபதி படத்திற்கு கூட்டிப்போனார். நான் குணா படம் பார்க்கலாம் என்றேன். ஆனால் அம்மா தளபதி பார்க்க என்னைக் கூட்டிப்போனார். இது என் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத அனுபவம்" என்று ஆர்.ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.