கார்த்திக் சுப்பராஜ்
நியு ஜெனரேஷன் இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களில் தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் கமர்ஷியல் மற்றும் விமர்சன ரீதியாக் அதிகம் பேசப்படும் ஒருவராக இருந்து வருகிறார். கதை ரீதியாகவும் திரைக்கதை ரீதியாகவும் தனது ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது புதிதாக முயற்சி செய்தும் வருகிறார். பீட்சா படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து அடுத்ததாக ஜிகர்தண்டா என்கிற ப்ளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்தார். ரஜினியை வைத்து பேட்ட , விக்ரமின் மகான் , ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. கடந்த ஆண்டு இவர் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரை தமிழ் சினிமாவின் ஒரு அரிய படைப்பு என்றே சொல்லலாம். அடுத்த படியாக சூர்யா 44 படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ரஜினி கொடுத்த ரியாக்ஷன்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கார்த்தி சுப்பராஜ் தான் இயக்கிய மகான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷனைப் பகிர்ந்துகொண்டார். " நான் எந்த கதை எழுதினாலும் அதை ரஜினியை மனதில் வைத்து தான் எழுதுவேன். ஏதாவது ஒரு படத்தின் ஒன்லைன் தோன்றினால் அதை உடனே அவரிடம் சொல்வேன். அந்த வகையில் மகான் படத்தின் கதையை அவரிடம் ஒன்லைனாக மட்டும் சொன்னேன். அந்த படத்தைப் பார்த்து ரஜினி ஏன் இந்த கதையை என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டர். நான் அவரிடம் சொன்னதாக சொன்னேன். ஆனால் வெறும் ஒன்லைனாக மட்டும் அவரிடம் கதை சொன்னதால் அப்போது அவரை அது கவரவில்லை. அதன் பிறகு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்தப்பின்னும் அவர் ஏன் இந்த கதையை எனக்கு சொல்லவில்லை என்று கேட்டார். அந்த கதையையும் நான் உங்களிடம் சொன்னேன். ஆனால் ஒன்லைன் மட்டும் தான் அப்போது என்னிடம் இருந்தது. அடுத்த முறை அவரிடம் ஏதாவது கதை அவரிடம் சொன்னால் அதை முழுவதுமாக டெவலப் செய்துவிட்டு தான் சொல்ல வேண்டும். ' என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.