தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் ஃபேண்டஸி ஆக்‌ஷன் திரைப்படம் 'கங்குவா'. பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் , யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் வெளியான 24 மணிநேரத்திலேயே பல லட்சம் பார்வையாளர்களை பெற்று அசத்திவிட்டது. 


 



கங்குவா படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த சூர்யா 43 திரைப்படத்திற்கு 'புறநானூறு' என பெயரிடப்பட்டது. சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தம் கொடுக்கும் வகையில் பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. அதற்கு பதில் அளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம். புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால் அதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவது பற்றி கூறி விரைவில் அதன் பணிகள் துவங்கும் என அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தனர். 


2022ம் ஆண்டு வெளியான 'எதற்கும் துணிந்தவன்' மற்றும் 'விக்ரம்' படத்தில்  ரோலக்ஸ்  என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். அதற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரின் படங்கள் வெளியாகாமல் தள்ளிப்போவதால் அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்ய வேண்டிய காட்டாயம் ஏற்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' திரைப்படமும் விடுதலை படத்தின் ரிலீஸுக்கு பிறகு தான் துவங்க உள்ளது என கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது சூர்யா 43 என சொல்லப்பட்ட 'புறநானூறு' படமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



 


தற்போது சூர்யாவின் 'கங்குவா' படம் மட்டுமே தயாராகி வருவதால் சூர்யா 43  படம் குறித்த கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி நடிகர் சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நேற்று இன்று நாளை, அயலான் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். தற்போது சூர்யா 43 படத்தை ஆர். ரவிக்குமார் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.