கானாத்தூர் மக்களின் தூய்மை பணிகளுக்காக பயன்படுத்தப்படும் நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் சூர்யா, 2D என்டர்டெய்ன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் 36 வயதினிலே, பசங்க 2, 24, மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம், உறியடி 2, விருமன், ஜெய்பீம், சூரரைப்போற்று உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது. இதில் சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றது. ஜெய்பீம் படம் உலகம் முழுவதும் பேசப்பட்ட படமாக அமைந்தது.
இதனிடையே சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் வழங்கினார்.
திரையுலக சாதனைகளுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன வாகனத்தை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது. இந்த வாகனத்தை நடிகர் சூர்யா சார்பாக அவரது தந்தையான நடிகர் சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார். இதன்போது 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் கானாத்தூர் நிர்வாகிகள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
நடிகர் சூர்யா, மாணவ மாணவிகளின் கல்விச் செலவு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவும் இயன்ற அளவில் உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். கல்விக்காக அவர் அகரம் அரக்கட்டளையை நடத்தி வருகிறார். தன்னலமற்ற இவரது சமூக சேவையை திரையுலகினரும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil : பிக்பாஸ் வீட்டில் வித்தை காட்டிய ஆயிஷா.. வாயை பிளந்த சக போட்டியாளர்கள்..!