பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரது ரசிகர் ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுதொடர்பான செய்திகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து தர்ஷனுடன் சேர்த்து 17 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, நடிகர் தர்ஷனும் அவருடன் கைது செய்யப்பட்ட சிலரும் பார்க் போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து காபி குடிப்பதும், சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பானது. குற்றவாளிக்கு சொகுசு வாழ்க்கையா என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
கைது செய்யப்பட்ட 17 பேரில் பத்து பேருக்கு ஜாமீன் கிடைத்தது. நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட ஏழு பேருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு தொடர்பாக நீதிபதிகள் மகேந்திரன், பர்வதிவாலா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நீதிபதிகள் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு மீது அதிருப்தியடைந்துள்ளனர்.
ரேணுகாசாமியை கொலை செய்ய காரணம் என்ன, தர்ஷன் - பவித்ரா கவுடாவுக்கு இடையே என்ன உறவு என்பது குறித்தும் நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஜாமீன் உத்தரவு விபரீதமானது. தரவுகளை படித்து பார்த்தால் கொலை வழக்கில் இருந்தே விடுதலை செய்வதற்கான உத்தரவு போல் உள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். மேலும், ஒருவரின் வாக்குமூலம் பெற 7 நாட்களாகி உள்ள நிலையில், மற்றவர்களின் வாக்குமூலம் வாங்க 20 நாட்களாகி உள்ளதற்கு காரணம் என்ன.
நேரில் கண்ட இரண்டு சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் ஒத்துப்போகும் வகையில், அரசிடம் ஆதாரங்கள் உள்ளதா. குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்கும் வகையில், அவர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. மூன்று பக்கங்களுக்குள் எழுத்துபூர்வமான உங்களின் வாதத்தை, ஒரு வாரத்திற்குள், சமர்ப்பிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் செய்த அதே தவறை, நாங்கள் செய்ய மாட்டோம். நாங்கள் தண்டிக்கவும் மாட்டோம், விடுதலை செய்யவும் மாட்டோம் என இவ்வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.