Toyotas Creta Rival: ஹுண்டாய் க்ரேட்டாவிற்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள, மாருதி எஸ்குடோ வரும் செப்டம்பர் மாதம் சந்தைப்படுத்தப்பட உள்ளது.
கட்டுக்கடங்காத க்ரேட்டா வேட்டை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் போட்டித்தன்மை மிக்க காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில், அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆன பிறகும் க்ரேட்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அணுகக் கூடிய விலை, நடைமுறை தன்மைக்கு உகந்த வடிவமைப்பு, விலைக்கு நிகரான மதிப்பு, பலதரப்பட்ட ஆப்ஷன்கள் (இன்ஜின்/எரிபொருள்/ட்ரான்ஸ்மிஷன்), மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவை, வாடிக்கையாளர்களை தொடர்ந்து க்ரேட்டா பக்கம் இழுக்கிறது. அதனை பின்னுக்கு தள்ள பல முன்னணி நிறுவனங்கள் முயற்சித்தும் இதுவரை வெற்றிகண்டதாய் இல்லை. நடப்பாண்டின் முதல் பாதியில் அதிகம் விற்பனையான எஸ்யுவி ஆகவும் இந்த கார் மாடல் தான் உள்ளது. இந்நிலையில் தான், க்ரேட்டாவிற்கு போட்டியாக மாருதி சுசூகி உருவாக்கியுள்ள, புதிய காம்பேக்ட் எஸ்யுவி வரும் செப்டம்பர் 3ம் தேடி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மாருதியின் டச்..டொயோடோவின் பிளான்..
மாருதியின் புதிய எஸ்யுவியின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியாகாவிட்டாலும், எஸ்குடோ என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. அரேனா விற்பனை தளத்திற்கான ஃபிளாக்ஷிப் கார் மாடலாக, இதனை நிலைநிறுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் ப்ரேஸ்ஸாவிற்கு மேலே, கிராண்ட் விட்டாராவிற்கு கீழே இந்த எஸ்யுவி நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் பிளாட்ஃபார்ம், உட்புறம், அம்சங்கள், டிசைன் மற்றும் இன்ஜின் ஆகியவை க்ராண்ட் விட்டாராவில் இருந்து அப்படியே பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான், எஸ்குடோவை அடிப்படையாக கொண்டு க்ரேட்டாவிற்கு போட்டியான புதிய எஸ்யுவியை உருவாக்க டொயோட்டா முடிவு செய்துள்ளது.
டொயோட்டாவின் புதிய எஸ்யுவி
இந்திய சந்தையில் தங்களது கார் மாடல்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும், கூட்டாளிகளாக டொயோட்டா மற்றும் மாருதி சுசூகி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதனடிப்படையில், மாருதியின் எஸ்குடோ அடிப்படையிலான புதிய காம்பேக்ட் எஸ்யுவியை டொயோட்டா அறிமுகப்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், எஸ்குடோ அறிமுகமான சில மாத இடைவெளியிலேயே டொயோட்டாவின் புதிய எஸ்யுவி உள்நாட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டாவின் புதிய எஸ்யுவி - டிசைன்:
வெளியாகியுள்ள தகவலின்படி, டொயோட்டாவின் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி ஆனது, கிட்டத்தட்ட நிறுவனத்தின் அர்பன் க்ரூசர் ஹைரைடரை போன்றே இருக்கும் என கூறப்படுகிறது. எஸ்குடோவைப் போன்றே, ஹைரைடரை காட்டிலும் சற்றே நீளமாகவும் இருக்கலாம். ஆனாலும், போர்ட்ஃபோலியோவில் ஹைரைடருக்கு கீழே தான் நிலைநிறுத்தப்படும். போட்டித்தன்மை மிக்க விலையில் சந்தைப்படுத்துவதற்காக, ADAS போன்ற ப்ரீமியம் அம்சங்கள் இந்த காரில் தவிர்க்கப்படலாம்.
டொயோட்டாவின் புதிய எஸ்யுவி - அம்சங்கள்:
லெதரேட் அப்ஹோல்ட்ஸ்ரி, அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஹெட் அப் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் ட்ரைவர்ஸ் டிஸ்பிளே, ஆட்டோ ஏர் கண்டிஷனர், ரியர் ஏசி வெண்ட்கள், கீலெஸ் என்ட்ரி & கோ, ஆம்பியண்ட் லைட்டிங், கனெக்டட் கார் அம்சங்கள், ரிவெர்ஸ் பார்கிங் கேமரா, ஒன்றுக்கும் அதிகமான ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, வெஹைகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரியர் பார்கிங் சென்சார்ஸ், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகளுடன் கூடிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், எல்இடி டெயில் லேம்ப்ஸ், எலெக்ட்ரிக் ஃபோல்டிங் விங் மிரர்ஸ் உள்ளிட்ட அம்சங்களை, டொயோட்டாவின் புதிய எஸ்யுவியில் எதிர்பார்க்கலாம்.
டொயோட்டாவின் புதிய எஸ்யுவி - இன்ஜின்
டொயோட்டாவின் புதிய எஸ்யுவியில் 103bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட் மற்றும் 115bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்ட்ரெயின் இடம்பெறலாம். குறைந்த விலையில் விற்பனை செய்ய, வலுவான ஹைப்ரிட் அம்சம் இந்த காரில் தவிர்க்கப்படலாம். அதேநேரம், 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். பணத்திற்கு நிகரான மதிப்பு, வலுவான செயல்திறன், நம்பகமான பிராண்ட் ஆகியவற்றின் காரணமாக, டொயோட்டா சார்பில் இருந்து வெளியாகும் புதிய எஸ்யுவி ஹுண்டாயின் க்ரேட்டாவிற்கு கடும் போட்டியளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI