அயோத்தி ராமர் கோயில் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நண்பகல் 12.30 மணிக்கு ராமர் கோயிலில் உள்ள கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். உள்ளே நடந்த நிகழ்வில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றனர். 


அதேசமயம் வெளியே சினிமா, விளையாட்டு, அரசியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த்  தனது மனைவி லதாவுடனும், நடிகர் தனுஷ் தனது மகன்களுடனும் பங்கேற்றனர். முன்னதாக சுமார் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி விமானத்தில் அயோத்தி சென்றார். அங்கு வருகை தந்திருந்த திரை பிரபலங்களும் அவரை சந்தித்தனர். அயோத்தி செல்வதற்கு முன் செய்தியாளர்களை சென்னை விமான நிலையத்தில் சந்தித்த ரஜினி, ‘500 ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. ராமர் கோயில் நிகழ்வில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’ என கூறினார்.






பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய ரஜினிகாந்த், “இந்த வரலாற்று தருணத்தில் நான் பங்கேற்றது எனது பாக்கியமாக கருதுகின்றேன். இனி ஒவ்வொரு ஆண்டும் நான் தவறாமல் இங்கு வருவேன்” என தெரிவித்தார். இதனிடையே ரஜினிகாந்த் அயோத்தி விழாவில் பிரபலங்கள் வரிசையில் தனியாக அமர்ந்திருந்தார். மனைவி லதாவுடன் சென்ற அவர் தனியாக இருந்தது பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இணையத்தில் வைரலாக ஒரு வீடியோ பரவி வருகிறது. 


அதில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்ற ரஜினி, அங்கு இருந்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் இரண்டு இருக்கைகளாக தர முடியுமா என கேட்கிறார். ஆனால் திட்டமிட்டபடி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மாற்ற முடியாது என கைவிரிக்கப்படுகிறது. இதனால் சற்று அப்செட்டான ரஜினி அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொறுமையுடன் ஆன்மீக நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றார் எனவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.