இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது. ரஜினிகாந்துடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சுவாரியர் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேட்டையன் ரிலீஸ் எப்போது?
இந்த நிலையில், வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, அதே தேதியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், வேட்டையன் படமும் அதே தினத்தில் வெளியாக இருப்பது பெரும் பரபரப்பை கோலிவுட்டில் உருவாக்கியுள்ளது.
ஜெய்பீம் படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சுவாரியர் ஆகியோர் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. இந்த படத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜெய் பீம் போல வெற்றி பெறுமா?
தரமான கதைக்களத்துடன் வெளியான ஜெய்பீம் படம் அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில், வேட்டையன் படத்திலும் அதேபோல தரமான கதைக்களம் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெயிலர் வெளியாகும் என்று எதிர்பார்ககப்படுகிறது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் சுமார் 160 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
வேட்டையன் - கங்குவா மோதல்:
மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே தினத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படமும் வெளியாக இருப்பதால் நடப்பாண்டில் மிகப்பெரிய நடிகர்கள் இருவரது படங்கள் மோதிக்கொள்வது இதுவே முதன்முறையாக அமைந்துள்ளது. நடப்பாண்டில் தனுஷின் கேப்டன் மில்லரும், சிவகார்த்திகேயனின் அயலானும் பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்ட பிறகு, நடப்பாண்டில் ஒரே தேதியில் பிரம்மாண்ட நடிகர்கள் இருவரது படங்கள் மோதிக் கொள்வது இதுவே முதன்முறை ஆகும்.