நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இசை வெளியீட்டைத் தாண்டி இந்த நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் வேறொரு திட்டமும் வைத்திருக்கிறார்கள். யார் உண்மையான் சூப்பர்ஸ்டார் என்பது இன்று மாலை தெரியவந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என இணையத்தில் கருத்து பரிமாறி வருகிறார்கள்!


ஜெயிலர்


நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் இசைவெளியீடு இன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.






 


யார் சூப்பர்ஸ்டார்


ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்கிற கேள்வி சமீபகாலமாக அதிகம் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில்  சமீபத்தில் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என்று அழைத்தது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. எல்லா காலமும் சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.


இதனை நிரூபிக்கும் வகையில் இன்று ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் ஒரே சூப்பர்ஸ்டார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பேசுவார்கள் என்று சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த அரங்கமும் ஒரே சூப்பர்ஸ்டார் என்று அதிரப்போகும் அந்தத் தருணத்திற்காக ரஜினி ரசிகர்கள் காத்திருக்கிறார்களாம்!


சவால் விடும் ஹுக்கும் பாடல்  வரிகள்


ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா வெளியாகி உற்சாகமான ஒரு வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் உண்மையான சம்பவம் இரண்டாவது பாடலான ஹுக்கும் வெளியானபோது தான் நிகழ்ந்தது. சுப்பர் சுப்பு எழுதிய இந்தப் பாடலில் பல உள்குத்துக்களை வரிகள் நிறைந்திருந்தன. மேலும் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்திற்காக நிகழும் போட்டியை பாடலில் இணைத்திருந்தார் பாடலாசிரியர். இதனால் ரஜினி ரசிகர்கள் இந்தப் பாடலின் வரிகளை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


என்ன மெசேஜ் சொல்லப்போகிறார் ரஜினி?


ஒவ்வொரு முறை மேடையேறும் போதும் தனது வாழ்க்கை அனுபவங்களில் இருந்து ரசிகர்களுக்கு பல முக்கியமான கருத்துக்களை ரஜினி சொல்வது வழக்கம்.  நகைச்சுவை கலந்து அவர் சொல்லும் கதைகளை விரும்பி கேட்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்று ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டில் பேசப்போகும் ரஜினி, என்ன மெசேஜ் சொல்லப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாகக் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்!