Rajinikanth Kamal Haasan Movie: இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். திரையுலகின் அனைத்து துறையிலும் ஜாம்பவனாக திகழ்ந்து உலக நாயகனாக கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது.
ரஜினி - கமல் படம்:
இந்த நிலையில், ரஜினி - கமல் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படமான இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்க உள்ளார்.
ரஜினி - கமல் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் மட்டுமே நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தில் நடிப்பாரா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
விரைவில் படப்பிடிப்பு:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளியான பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கருதப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட உள்ளது. ரஜினிகாந்தின் கடைசி படமான கூலி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், கமல்ஹாசனின் தக் லைஃப் படமும் தோல்விப்படமாகவே அமைந்தது.
லோகேஷ் கனகராஜ், நெல்சன் என பல இயக்குனர்கள் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சி-க்கு கிடைத்துள்ளது. சுந்தர்.சி ரஜினிகாந்தின் மிகப்பெரிய வெற்றிப்படமான அருணாச்சலத்தை இயக்கியவர். 1997ம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து சுந்தர் சி இந்த படத்தை இயக்கினார். தற்போது சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்தை இயக்குகிறார். சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான கேங்கர்ஸ் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
சுந்தர்.சி:
சுந்தர் சி தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். அவரும் தனது பட பணிகளை முடித்த பிறகு அவருக்கு இந்த படத்தின் பணிகளை தொடங்க உள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் அமரன் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், தக் லைஃப் படுதோல்வி அடைந்தது. இதனால், இந்த படத்தை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக எடுக்கவே சுந்தர்.சி-யை தேர்வு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் சில இயக்குனர்கள் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தாலும் அதன் பணிகள் தொடங்கப்படவில்லை. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திரைப்பட பணிகளை கமல்ஹாசன் ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.